மதுரை:
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங் கும் நேரத்தில் குடிநீர், சுகாதாரம், சாலை மற்றும் தெருவிளக்கு சேவைக் குறைபாடுகளை அரசியல் கட்சிகள் பூதாகரமாக்கி பொதுமக்கள் போர்வையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து அரசியலாக்குகின்றனர்.
இதனால், மக்களே அதிகாரிகளை நேரடியாகத் தொடர்புகொண்டு தங்கள் குறைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மாநகராட்சி ஆணையர் சித்ரா, ‘ஸ்மார்ட் மதுரை’ என்ற புதிய செயலியை நேற்று அறிமுகம் செய்தார். இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாநகராட்சியில் போதுமான வரி வசூலாகாமல் ஊழியர்களின் ஊதியத்துக்கும், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆணையராக சித்ரா வந்த பிறகு வரி வசூலை மேம்படுத்தி சொத்துவரி முறைகேட்டில் நடந்த குளறுபடிகளை அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுத்தார்.
இதனால், மாநகராட்சிக்கு தற்போது ஆண்டுக்கு ரூ.20 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. வரி வசூலிலும் தமிழக அளவில் மதுரை மூன்றாம் இடம் பிடித்தது. ஏலம் போகாத வருவாய் இனங்களை மேம்படுத்தி அவற்றை ஏலம் விட நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாநகராட்சியில் நீடிக்கும் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் மோதல், திமுக உட்கட்சி பூசல், திமுக-அதிமுக நேரடி மோதல் போன்ற பல்வேறு காரணங்களால், அவர்கள் பொதுமக்கள் போர்வை யில் ஆளும்கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதாக நினைத்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மற்றும் அரசியல் கட்சியினர் சிலர் கூறியது: அன்றாடம் குடியிருப்புகளில் நடக்கும் குடிநீர் குழாய் உடைப்பு, பாதாள சாக்கடை, சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் தெருவிளக்கு பிரச்சினை களைக்கூட அரசியல் கட்சியினர் பொதுமக்கள் போர்வையில் சமூக வலைதளங்களில் பதிவிடு கின்றனர்.
பொதுமக்களுக்காக மைய அலுவலகம், மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் நேர்மையான அதிகாரிகள் முதல் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் வரை அன்றாடம் பெரும் சிரத்தை எடுத்துப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி எதையும் அரசியலாக்கத் துணிந்துள்ள அரசியல் கட்சிகள், மக்கள் பிரச் சினைகளைக் கையில் எடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றுத்தீர்வாக, ஆணையர் சித்ரா புதிய உத்தியைக் கையாண்டுள்ளார்.
அதாவது பொதுமக்களே அதிகாரிகளை நேரடியாகத் தொடர்புகொண்டு தங்கள் குறைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ‘ஸ்மார்ட் மதுரை’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் ‘ஸ்மார்ட் மதுரை’ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்தச் செயலியில் பொதுமக்கள் இருப்பிடத்தில் இருந்தே தங்கள் பகுதியில் உள்ள சேவை குறைபாடுகளைத் தெரிவிக்கலாம். தெருவிளக்கு, குடிநீர் விநியோகம், திடக்கழிவு சேகரிப்பு, சாலைகள் பராமரிப்பு போன்றவற்றைப் பற்றியும் புகார்களை இந்தச் செயலியில் தெரிவிக்கலாம்.
மாநகராட்சியின் இதர சேவை களைப் பற்றியும் பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தெரி வித்து இந்த புதிய செயலி மூலம் தீர்வு காணலாம், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் தெரிவிக்கப்பட்ட புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதால் புதிய செயலி வரவேற்பைப் பெறத் தொடங்கி உள்ளது.
செயலியை கண்காணிக்க தனி அதிகாரிகள் குழுவையும் ஆணையர் நியமித்துள்ளார்.