கேப்டன் என்பவர் ஒரு வீரர் சதம் அடித்து விட்டால், அவரை அழைத்து விருந்து கொடுக்க தேவையில்லை ; கம்பீருக்கு கபில்தேவ் அறிவுரை!!

புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் இந்திய அணி விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக பயிற்சியாளர் கம்பீர் மீது முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில் கம்பீருக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுரை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-


என்னை பொறுத்தவரை தற்போது உள்ள கிரிக்கெட் உலகில் பயிற்சியாளர் என்ற பொறுப்பே இல்லை என்று நினைக்கிறேன். காம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க முடியாது. அவர் அணியின் மேலாளராக வேண்டுமென்றால் இருக்கலாம்.

நான் பயிற்சியாளர் பற்றி பேச வேண்டும் என்றால் பள்ளிகல்லூரியில் எங்களுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்த நபர்களைப் பற்றி தான் பேச வேண்டும். அவர்கள் தான் உண்மையில் பயிற்சியாளர்கள்.


ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கோ அல்லது விக்கெட் கீப்பருக்கோ காம்பீர் எவ்வாறு சொல்லித்தர முடியும்? எனவே வீரர்களை நிர்வகிப்பது தான் மிகவும் முக்கியம். அணியின் மேலாளராக நீங்கள் வீரர்களை ஊக்கப்படுத்தி உங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டு வர வேண்டும்.

இதன் மூலம் இளம் வீரர்கள் உங்களைப் பார்த்து பின் தொடர்வார்கள். பயிற்சியாளர் அல்லது கேப்டனின் பணியே அணிக்கு நம்பிக்கை தருவது மட்டும்தான். இன்னும் உன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறி, அதன் பின் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

கேப்டன் என்பவர் ஒரு வீரர் சதம் அடித்து விட்டால், அவரை அழைத்து விருந்து கொடுக்க தேவையில்லை. அதற்கு பதிலாக யார் சரியாக விளையாடவில்லையோ அவர்களுடன் விருந்துக்கு செல்ல வேண்டும்.


அவர்களுக்கு நம்பிக்கையை நாம் ஏற்படுத்த வேண்டும். ஒரு கேப்டனாக நாம் நமது செயல்பாடுகளை மட்டும் கவனிக்கக்கூடாது. ஒட்டுமொட்ட அணியும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும். இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *