பலன்களை அள்ளித்தரும் அஞ்சனை மைந்தன் அனுமன்!!

ராமரின் தீவிர பக்தனான அனுமன் துணிச்சல், வலிமை, அறிவு, ஆரோக்கியம், புகழ், வீரம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக அமையப் பெற்றவர். மகாவிஷ்ணு ராமராக அவதாரம் எடுத்தபோது, மகாலட்சுமி சீதா தேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் அவதரித்தனர்.

அதுபோல, ராமருக்கு உதவி செய்வதற்காக சிவபெருமான் அனுமனாக அவதரித்ததாக கூறப்படுகிறது.

எனவே அனுமனை வழிபடுவதன் மூலம் சிவபெருமானையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அனுமன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் அனுமன் ஜெயந்தி நாளான இன்று அனுமன் பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மார்கழியில் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வராவிட்டால் அமாவாசையில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை கொண்டாடலாம்.

ஆனால் வட மாநிலங்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி வைகாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயர் என்றால் பளிங்கு போல் களங்கமற்ற மனம் உடையவன் என்று பொருள்.

பொன் நிறமுடையவன், அஞ்சனை மைந்தன், குண்டலங்களால் ஒளிவிடும் முகத்தை உடையவன், கரங்கூப்பி வணங்கி கொண்டு இருப்பவன் என்ற பொருள்களும் உண்டு.

திருமாலின் வாகனமாக கருதப்படும் கருட பகவான் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார்.

அதுபோல ஆஞ்சநேயர் ‘சிறிய திருவடி’ என்று போற்றப்படுகிறார். ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். இருப்பினும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாகும்.

ஆஞ்சநேயரை வழிபட்டால் குழந்தை பேறு, புகழ், கல்வி, செல்வம், வீரம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பெறலாம்.

ஆஞ்சநேயரை மனதில் நினைப்பவர்கள் இந்த பிறவியில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்வர். மறு பிறவியில் ராமன் அருளால் முக்தியும் அடைவார்கள். ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம்.

எனவே ஆஞ்சநேயரின் வாலுக்கு 48 நாட்கள் சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி, நன்மைகள் பல அடையலாம்.

படிப்பில் பின்தங்கிய குழந்தைகளை 108 அல்லது 1008 முறை ‘ஸ்ரீ ராமஜெயம்’ எழுத வைத்து, அதை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு அணிவித்தால், அந்த குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

ஆஞ்சநேயரின் படத்தையும், ராமர் பட்டாபிஷேக படத்தையும் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுபவர்களுக்கு, வெண்ணெய் கரைந்து போவதுபோல துன்பங்கள் கரைந்து போகும்.

சனிக்கிழமைதோறும் அனுமன் கவசம் பாடி வழிபட்டால் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலை அணிவித்து, வெண்ணெய் சாற்றி, திராட்சை பழம் படைத்து, ஸ்ரீ ராம ஜெயம் எழுதி, அதை காகித மாலையாக அணிவித்து வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *