சென்னை:
2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) காலை தொடங்கியது. ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்க வேண்டிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார்.
தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார்.
நடந்தது என்ன? இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால், மரபுப்படி ஆளுநர் உரையுடன் அவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆளுநரும் அவைக்கு வந்திருந்தார்.
அவையில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பின்னர், ஆளுநர் தனது உரையுடன் அவை நடவடிக்கையை தொடங்கிவைக்கும்படி அவருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்தார். ஆனால், ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
“நான் தொடர்ச்சியாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் அதை ஏற்காதது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துவிட்டு ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.
தீர்மானம் நிறைவேற்றம்: தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அரசியலமைப்பு விதிகளை ஆளுநர் தொடர்ந்து மீறுகிறார்.
பல மாநிலங்களும் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் தொடங்கும் மரபை மாற்ற வேண்டும் என்று விரும்புகின்றன. பிற மாநில அரசியல் கட்சிகளுடன் இணைந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
தொடர்ந்து ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாக அவைக் குறிப்பில் பதிவு செய்ய வழிவகை செய்வதற்கான தீர்மானத்தை முதல்வர் முன்வைத்தார். அதன் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதன்முறை அல்ல… தமிழக சட்டப்பேரவை ஆண்டு முதல் கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்வது இது முதன்முறை அல்ல.
முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு ஆளுநர் ரவி தனது உரையில் அரசு தயாரித்துத் தந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த சில வார்த்தைகளைப் புறக்கணித்தார்.
அவர் கூற மறுத்த மகளிர் முன்னேற்றம், பெரியார், அம்பேத்கர், கலைஞர், மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகள் அவைக்குறிப்பில் இடம்பெறும் என்று முதல்வர் அறிவித்தார். இதனால் ஆளுநர் ரவி பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.
தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு, தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி ஆளுநர் தனது உரையை வாசிக்காமலேயே வெளிநடப்பு செய்தார்.
இந்த ஆண்டும், ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளார். அதன் பின்னர் லோக்பவன் வெளியிட்ட அறிக்கையில், ஆளுநர் ஏன் வெளிநடப்பு செய்தார் என்று 10 காரணங்கள் அடுக்கி விளக்கப்பட்டுள்ளது.