கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – தினகரன் காட்டம்!!

போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், திமுகவின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்கா பறிமுதல் – வேலியே பயிரை மேய்வது போல போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் வெளிமாநிலங்களில் இருந்து 440 கிலோ குட்கா கடத்தி வந்ததாக திமுகவின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் போஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த பழனிசாமி ஆட்சிக்காலத்தில் குட்கா நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறி சட்டப்பேரவைக்கே குட்காவை எடுத்துச் சென்று குற்றம்சாட்டிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது முதலமைச்சரான பின் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கவோ, ஒழிக்கவோ எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

2000 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடங்கி தமிழகத்தில் அடிக்கடி பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் திமுக நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதன் மூலம் ஆளுங்கட்சியின் ஆதரவுடனே இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதோ? என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழந்து வரும் தமிழக இளைஞர்களை பாதுகாக்கும் வகையில், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *