தமிழக சட்டசபை தொடங்கியது – ஆளுநருக்கு கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து வரவேற்ற சபாநாயகர் அப்பாவு!!

சென்னை:
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கூடும் சட்டசபை கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அதன் பின்னர் அந்த உரையை சபாநாயகர் தமிழில் வாசிப்பதும் வழக்கமாக உள்ளது.


ஆனால் கடந்த 2023-ம் ஆண்டில், அரசு கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே படிக்காமல், சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தார்.

எனவே பேரவை விதிப்படி அந்த உரையை ரத்து செய்துவிட்டு, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அரசு கொடுத்திருந்த ஆளுநர் உரை, அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் ஆளுநர் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் புறக்கணித்தார். அதற்கு, தான் கேட்டுக்கொண்டபடி தேசிய கீதத்தை அவை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கவில்லை என்ற காரணத்தை கூறினார்.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் 20-ந்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது என்றும் அன்றைக்கு நடக்கும் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை புரிந்தார். ஆளுநருக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.

பரபரப்பான சூழ்நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளும் கட்சி மீதும் அரசு மீதும் என்னென்ன குற்றச்சாட்டுகளை வைக்கலாம்?

என்பதை அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் பட்டியல் போட்டு கொண்டு வரும். அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட அரசு தரப்பினரும் தயாராகி வருவார்கள்.

எனவே இந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசியல் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *