பெரம்பலூர்:
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளரான குன்னம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் ஜன.26-ம் தேதி திமுகவில் இணைகிறார்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம் அரணாரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் ஆர்.டி.ராமச்சந்திரன் கூறியது: ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழுவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அழைப்பார் என்று எதிர்பார்த்திருந்தோம்.
அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தால் என்ன செய்யலாம் என்றுகூட எங்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கருத்து கேட்டார். நாங்கள் எங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தோம்.
ஆனால், இதுவரை பழனிசாமி எங்களை அழைக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், சசிகலா ஆகியோரை கட்சியில் இணைக்க மாட்டோம் என்று பழனிசாமி கூறியிருந்தார்.
இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வத்திடம் தடுமாற்றத்தை நாங்கள் தெரிந்து கொண்டோம். அவரால் எந்த வாக்குறுதியையும் எங்களுக்குக் கொடுக்க முடியவில்லை. என்னை அரசியலில் அறிமுகம் செய்து வைத்தது ஆர்.வைத்திலிங்கம்தான்.
குன்னம் தொகுதியில் எனக்கு சீட் வாங்கி கொடுத்ததும் அவர்தான். தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார்.
எனது வழிகாட்டியான அவரது வழியில் நானும் செல்ல உள்ளேன். 300-க்கும் அதிகமான எனது ஆதரவாளர்களுடன் ஜன.26-ம் தேதி திமுகவில் இணைகிறேன் என்றார்.