சென்னை:
தமிழகத்தில் மாநில அளவிலான பயிற்சிகளின் போது கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் ஆசிரியர்களுக்கு ஆய்வக வழி அனுபவக் கற்றலை வழங்கும் நோக்கில், மாநில வள மையம் உருவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான கற்றல், கற்பித்தல் உத்திகளை ஆய்வு செய்து வகுப்பறைக்கு தேவையான பரிந்துரைகளை தருவது, மாணவர்கள் செய்து பார்த்து கற்பதற்கான ஆய்வக மாதிரிகளை உருவாக்குவது ஆகியவை இந்த மையத்தின் நோக்கமாகும்.
அந்த வகையில் சென்னை டிபிஐ வளாகத்தில் ரூ.5 கோடியில் அதிநவீன வசதிகளுடன் மாநில வள மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று திறந்து வைத்தார். அப்போது பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் உடனிருந்தார்.
புதிதாக திறக்கப்பட்ட இந்த மையத்தில், கற்றல், கற்பித்தலை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும், பணியிடை பயிற்சிகளின் போது ஆசிரியர்கள் செய்து கற்பதற்கு வாய்ப்பளிக்கவும், கற்பித்தலில் புதிய அணுகுமுறை சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனுடன், ஆசிரியர் மற்றும் மாணவர் பாடப்பொருள் சார்ந்த அறிவை பெறும் வகையில், மொழிகள் ஆய்வகம் மற்றும் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு தனித்தனி அரங்குகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அறை, மாணவர்களே பரிசோதனைகளை செய்து பாடங்களை கற்றுணர `கற்க கசடற’ என்ற பெயரில் தனியே அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.