சென்னை:
“கறிக்கோழி விவகாரம் குறித்து பேச சட்டப்பேரவையில் அனுமதிக்கவில்லை, திமுக அரசு சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்கிறது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கறிக்கோழி விவகாரம் தொடர்பாக அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. பின்னர் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின், “கறிக்கோழி விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சர்களிடம் கலந்தாலோசித்த பிறகு, இது குறித்து நாளை விவாதிக்கலாம்” என்றார். இதனை ஏற்காத அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “மூலப்பொருட்கள் விலை உயர்வால் கறிக்கோழி பண்ணையில் பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு கூலி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கறிக்கோழி விவகாரம் குறித்து பேச அனுமதிக்கவில்லை, திமுக அரசாங்கம் சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்கிறது.
இது 40 ஆயிரம் விவசாய குடும்பங்களின் பிரச்சினை, 5 லட்சம் தொழிலாளர்களின் பிரச்சினை. மக்களின் பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டுவர கூட அனுமதி மறுத்தால் என்ன செய்வது? அரசாங்கம் இரு தரப்பிலும் பேசி சுமூகமான தீர்வு காண வேண்டும்.
அதேபோல், திமுக பொறுப்பேற்றதிலிருந்து கொசு உற்பத்தியாவதை தடுப்பதில் கவனம் செலுத்தவில்லை.
கொசுவினால்தான் பல்வேறு நோய்கள் மக்களை தாக்குகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர் உட்பட பல மாவட்டங்களில் சிக்கன் குனியா ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிவார்டுகள் அமைத்து சிகிச்சை வழங்க வேண்டும்.
சிக்கன் குனியா ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் அமையும். இது குறித்து தான் பூஜ்ஜிய நேரத்தில் பேச அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுத்து விட்டனர், அதனால்தான் வெளிநடப்பு செய்தோம்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அந்த எரிச்சலில்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமாக பதிலளித்து வருகிறார்கள். மாணவர்களின் வாக்குகளை பெறுவதற்கு தான் லேப்டாப் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
மாணவர்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என அவர்கள் நினைத்திருந்தால், கல்லூரி துவங்குவதற்கு முன்பே அவர்கள் லேப்டாப் கொடுத்திருக்க வேண்டும்.
திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் போதைப் பொருள் விற்பனை தான்.
அதை தடுக்க இயலாத அரசாக உள்ளது. இத்தனை நிகழ்வுகள் நடைபெறுவதெல்லாம் போதை ஆசாமிகளால் தான். அதுவும் கஞ்சா போதை ஆசாமிகளால் தான். 20 நாட்களில் 46 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதமும் பெண்களும், சிறுமிகளும் பாதிக்கப்படுகிறார்கள். அதை கட்டுப்படுத்த இந்த அரசால் முடியவில்லை. இதற்கு காரணம் நிரந்தர சட்ட ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படாதது தான்.
அதிமுக ஆட்சியில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. திமுகவை போன்று அடக்கமுறை எங்களது ஆட்சியில் இல்லை.
தற்போது எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும், அனுமதி கொடுப்பதில்லை. அப்படி போராடினாலும் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் விவசாயிகளில் இருந்து அனைவரும் போராடி வருகிறார்கள்.
ஆறு மாதமாக போராட்டங்கள் நடைபெறுகிறது. இது அரசாங்கத்துக்கு தெரியாதா? இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சி. போராடுபவர்களை திமுக ஒடுக்கப்பார்க்கிறது” இவ்வாறு இபிஎஸ் தெரிவித்தார்.