சென்னை:
காஞ்சிபுரம் காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை பீடத்திடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் வழிபாடுகளுக்காக சந்தியா, இந்து, ஜெயந்தி ஆகிய மூன்று யானைகள் உரிய சான்றிதழுடன் கோவில் திருவிழாக்கள், பூஜைகளுக்கு அவ்வபோது பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்த யானைகளை கவனித்து வந்த பாகன் 2015ல் காலமானதால், 3 யானைகளும் வனத்துறையிடம் பரமாரிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து திருச்சி எம்.ஆர் பாளையம், யானை காப்பகத்தில் 3 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், யானைகளை பராமரிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால், கோனேரிக்குப்பம் யானைகள் மையத்துக்கு மீண்டும் அனுப்பக் கோரி காமகோடி பீடம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பீடத்துக்கு சொந்தமான கோனோரிக்குப்பம் மையத்தை நிபுணர் குழு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘‘சந்தியா, இந்து, ஜெயந்தி ஆகிய 3 யானைகளையும் காஞ்சி காமகோடி பீடத்திடம் 1 வாரத்தில் ஒப்படைக்க வேண்டும். காஞ்சி பீடத்தின் செலவில் வனத்துறை வாகனத்தில் பாதுகாப்பாக யானையை கொண்டு வர வேண்டும்.
யானைகளின் உடல்நிலை குறித்து 3 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அறிக்கை தந்த பின்னர் கோனேரிகுப்பம் முகாமிற்கு மாற்ற வேண்டும்.
யானைகளை வழிபாடுகளுக்கு பயன்படுத்தலாம். மாதத்திற்கு 1 முறை யானையின் உடல் நலம் குறித்து மாவட்ட நல்வாழ்வுத்துறை ஆய்வு செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘யானைகளுக்கு வயதாகி விட்டது.
58 ஏக்கரில் உள்ள திருச்சி முகாமிற்கு மோசமாக உடல்நிலையில் 2019ம் ஆண்டு யானைகள் கொண்டு வரப்பட்டன. 8 யானைகள் இருந்த நிலையில் 1 யானை இறந்து விட்டதால், தற்போது 7 யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யானைகளை அனுப்பினால், மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்பு உள்ளது. கால அவகாசம் அளிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்காத நீதிபதிகள், ‘‘பீடத்துக்கு சொந்தமான யானைகளை 6 ஆண்டுகள் வனத்துறை வைத்துள்ளது.
போதுமான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில், பீடத்திடம் யானைகளை தர வனத்துறை மறுக்க முடியாது.
யானைகளை உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதனால், தனி நீதிபதியின் முடிவில் தலையிட முடியாது’’ என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.