சண்டிகார்,
பஞ்சாப் மாநிலம் பதேகார்க் நகரில் உள்ள பழைய பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரி ஒருவர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள ஹர்சரண் சிங் புல்லார் ஒரு வழக்கை முடித்து கொடுத்ததற்காக ரூ.8 லட்சம் பணம் கேட்டதாக அவர் மீது குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, மாதந்தோறும் அவருக்கு கொடுத்த பணத்திற்கான ஆதாரங்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரின்பேரில் சண்டிகரில் உள்ள ஹர்சரண் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின்னர் அவரை கைது செய்து சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
புல்லருக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிர்ஷானு என்பரும் கைது செய்யப்பட்டார், மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடமிருந்து ரூ.21 லட்சத்தை மீட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து வீ்டியோ ஆதாரங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
புல்லாரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, சுமார் ரூ.5 கோடி கணக்கில் வராத ரொக்கம், 1½ கிலோ தங்க நகைகள், அசையா சொத்துகளின் ஆவணங்கள், 2 சொகுசு வாகனங்கள், 22 விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள், லாக்கர் சாவிகள், 40 லிட்டர் வெளிநாட்டு மதுபானம், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ஏர்கன் உள்ளிட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளையும் பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.