நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது; டெல்லியில் இக்கூட்டணி பேசப்படுகிறது என்றால், அதற்கு முதல்வர் ஸ்டாலின், ம்மதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் தான் காரணம்.” – மதுரை பொதுக்கூட்டத்தில் கோ.தளபதி விளாசல்!!

மதுரை:
”நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. டெல்லியில் இக்கூட்டணி பேசப்படுகிறது என்றால், அதற்கு முதல்வர் ஸ்டாலின், ம்மதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோர்தான் காரணம்.” என்று திமுக மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக சாடியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக தலைவர் விஜய், “எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்குதரப்படும்” என்று அறிவித்திருந்தார்.

அவரது இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் புதிதாக இருந்தது. இதுவரை ஆட்சி செய்த திமுக, அதிமுக இரு கட்சிகளும், தங்கள் ஆட்சிகளில் வேறு கட்சிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கவே இல்லை.

விஜய்யின் ஆட்சியில் பங்கு என்ற குரலை பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியினர், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு, கனிசமான ‘சீட்’ என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.

குறிப்பாக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், ஆட்சியில் பங்கு என்பதை வெளிப்படையாக பேசி வந்ததோடு, கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவேன் என்று சமூக வலைதளங்களிலும் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார்.

இந்தச் சூழலில், ராகுல் காந்தியின் நெருக்கம் காட்டும் காங்கிரஸ் நிர்வாகி, பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியது, திமுக கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியது.

அதன்பின், டெல்லியில் சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசிய, கட்சி மேலிடம், கூட்டணி தொடர்பாக வெளிப்படையாக எதுவும் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதனால், கடந்த சில நாட்களாக, காங்கிரஸ் நிர்வாகிகளின் கலக குரல் கொஞ்சம் அடங்கிப்போய் இருக்கிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று இரவு திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பற்றி, அக்கட்சி மாநகர செயலாளர் கோ.தளபதி மிக கடுமையாக பேசியிருக்கிறார்.

இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் கோ.தளபதி பேசியதாவது: ”ஆளுநருக்கு தமிழ் தெரியாததால் நாங்கள் சட்டப்பேரவையில் நல்லா திட்டுவோம்.

அவருக்கு நாங்க என்ன பேசுறோம் என்று தெரியாமலே போய்விடுவார். ஆனால், முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையிில் ஆளுநரை யாரும் விமர்சிக்கக்கூடாது, கத்தக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

ஆனால், நானெல்லாம் முதல்வர் சத்தம் போட்டா போட்டுட்டு போறாரு என்று ஆளுநரை எதிர்த்து கத்திவிட்டேன்.

தமிழகத்தின் வரலாற்றையும், தமிழ் மொழியின் வரலாற்றையும் தெரியாத இப்படிபட்ட ஆளுநரை வைத்துக் கொண்டு என்ன செய்வது. எடப்பாடி ஆரம்பத்தில் நல்லாத்தான் இருந்தாரு. அவரும் பாஜகவுடன் சேரவில்லை.

சேர்ந்தால் எப்படியும் நம்மை அமுக்கிவிடுவாரு என்று நினைத்திருந்தார். கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி, அவர் மனசை கரைத்துவிட்டார்கள்.

சமீபத்தில் மதுராந்தகத்தில் நடந்த என்டிஏ கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஒரு முறை கூட அதிமுக என்று சொல்லவில்லை. பழனிசாமி தான் முதல்வர் என்று சொல்லவில்லை.

இரட்டை இன்ஜின் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதிமுக ஒரு வேளை ஜெயித்து வந்தாலும், முதல்வர் பதவியை பாஜக கைப்பற்றும். அதற்கு தான் மறைமுகமாக பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்குதான், திமுகவுக்கு வாக்களிக்க சொல்கிறோம்.

நான் திருப்பரங்குன்றத்தில் பிறந்து வளர்ந்தவன். 10, 15 வயது இருக்கும்போது, பசங்களுடன் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று விளையாடியுள்ளோம். அங்கு சும்மாயிருந்த எல்லை கல்லில் தீபம் ஏற்றச் சொல்கிறார்கள்.

அந்தக் கல் 200 ஆண்டுகளுக்கு முந்தைய எல்லை கல் என்று வரலாறு கூறுகிறது. ஆனால், பாஜக திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்னிருந்து வாக்குகளைப் பெற அரசியல் செய்கிறது.

எதற்கும் அஞ்சாத ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின்தான். ஒரே நிலைபாட்டில் பயணிக்கிறார். யாரிடமும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், தமிழ் மொழிக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் முதல்வர் ஸ்டாலின் ஒய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார்.

காங்கிரசில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை சொல்ல எனக்கு என்ன பயமா ? மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோரை தான் சொல்கிறேன். அவர்கள் எம்பியாகிவிட்டார்கள்.

அவர்கள் இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என நினைக்கிறார்கள். அவர்கள் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை ‘சீட்’டே கொடுக்கக்கூடாது.

அதற்கு நம்மால் ஆன காரியங்களை செய்ய வேண்டும். நான் எதற்காக சொல்கிறேன் என்றால், நாம் உணர்வோடு இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியை காப்பாற்றி கொண்டு இருக்கிறோம். நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது.

டெல்லியில் இக்கூட்டணி பேசப்படுகிறது என்றால், அதற்கு முதல்வர் ஸ்டாலின், ம்மதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மூன்று பேர்தான் காரணம். இன்னும் சொல்ல பல விவகாரங்கள் உள்ளது அதனை எல்லாம் கூறினால், நல்லதல்ல தப்பாக போய்விடும்.

ஒரு தொகுதிக்கு ரூ.3000், 4000 ஓட்டுதான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பது தான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது” என்று திமுக மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *