காதல் திருமணம் செய்து கொள்பவர்களின் குடும்பத்தை புறக்கணிக்க வேண்டும் – மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் முடிவுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை!!

போபால்:
காதல் திருமணம் செய்து கொள்பவர்களின் குடும்பத்தை புறக்கணிக்க வேண்டும் என மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டம், பஞ்சேவா கிராமத்தில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், இளைஞர் ஒருவர் கிராமத்தின் புதிய விதிகளை பகிரங்கமாக வாசித்தார். இது தொடர்பரான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அதில் அவர் கூறியிருப்பதாவது: இளைஞரோ, இளம்பெண்ணோ தங்கள் விருப்பப்படி வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டால் அவர்களை மட்டும் தண்டிக்கக் கூடாது.

அவர்களுடைய குடும்பத்தினரை சமூக ரீதியாக புறக் கணிக்க வேண்டும். குறிப்பாக, சமூக நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்கக் கூடாது. பால் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கக் கூடாது.

அக்குடும்பத்தினரை யாரும் வேலைக்கு அழைக்கக் கூடாது. அவர்களுடைய நிலத்தில் யாரும் வேலைக்கு செல்லக்கூடாது.

இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர் களுக்கும் அக்குடும்பத்தினருடன் பேசுபவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் கடும் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர்களும் ஒதுக்கி வைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் மூன்று குடும்பத் தலைவர்களின் பெயர்கள் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இது அக்குடும்பத்தினரின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ”சமூகப் புறக்கணிப்பு என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதுகுறித்து முறையான புகார் அளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அந்த கிராம மக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சட்டம் என்ன சொல்கிறது ?: இந்திய அரசியல் சாசன சட்டப்படி, 18 வயது நிரம்பிய பெண்ணும், 21 வயது நிரம்பிய ஆணும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை உள்ளது.

இதுபோன்ற ‘பஞ்சாயத்து’ தீர்ப்புகள் செல்லாது என்றும், காதல் ஜோடிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை என்றும் உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *