நாமக்கல்:
நாமக்கல்-திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் இரண்டு சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
இருவர் பலத்த காயங்களுடன் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
திருச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி பிக் அப் சரக்கு வாகனம் ஒன்று சாக்கு மூட்டை பாரம் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
இரு வாகனங்களும் நாமக்கல் திருச்சி சாலை ரயில்வே மேம்பாலம் மீது வந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.
மேலும், மேம்பாலத்தின் ஒரு பக்கத்தில் வந்த இரு சக்கர வாகனத்தின் மீதும் சரக்கு வாகனம் மோதியது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நாமக்கல் ஜெய்நகரைச் சேர்ந்த கார்த்திக், இந்திரா நகரைச் சேர்ந்த சேனாதிபதி ஆகிய 2 இளைஞர்கள், கார்நாடகாவைச் சேர்ந்த பிக் அப் சரக்கு வாகன ஓட்டுநர் உசேன் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லாரி ஓட்டுநர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபரும் பலத்த காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி, ஏடிஎஸ்பி விஜயராகவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடைபெற்ற இடம் நாமக்கல்-திருச்சி செல்லும் பிரதான சாலை என்பதால் 1 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினர் வாகனப் போக்குவரத்தை சீரமைத்தனர்.