சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டம் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் பிக்சித் ராணா. இவரது உறவினர் பியூஷ்.
இவர்கள் நீண்ட நாட்களாக பிட்புல் வகை நாயை வளர்த்து வந்தனர். இவர்கள் அண்மையில் பார்மர் பகுதியிலுள்ள பார்மணி கோயிலில் வீடியோ எடுப்பதற்காக சென்றிருந்தனர்.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்தது. வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் இருவரும் இந்தப் பனிப்பொழிவில் சிக்கிவிட்டனர்.
இவர்களால் அந்தப் பனியிலிருந்து மீண்டு வரமுடியவில்லை. இவர்களைக் காணாமல் உறவினர் தேடி வந்தனர்.
இதுதொடர்பாக போலீஸாரிடம் புகார் தரப்பட்டது. போலீஸாரும், மீட்புப்படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது அவர்களது சடலங்கள் பார்மணி கோயில் அருகே கிடைத்தன.
அப்போது பிக்சித் ராணா, பியூஷ் சடலங்களுக்கு அருகிலேயே அவர்கள் வளர்த்த நாய் காவல் காத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
கடும் குளிர், அதிக அளவில் பனிப்பொழிவு இருந்தபோதும் 4 நாட்களாக சடலங்களை விட்டு அகலாமல் அந்த நாய் அங்கேயே நின்று கொண்டிருந்தது.
இது பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. தொடக்கத்தில் தனது எஜமானர்களின் உடல் அருகே, மீட்புப்படையினரை செல்லப்பிராணியான நாய் விட மறுத்தது.
அவர்கள் அந்த உடலுக்கு ஏதாவது தீங்கு செய்து விடுவரோ என்ற பயத்தில் அந்த வாயில்லாப் பிராணி பாதுகாத்தது.
அதன் பின்னர் எஜமானர்களின் உடலுக்கு தீங்கிழைக்க மாட்டார்கள் என்பதும், உடலை எடுத்துச் செல்லவே அவர்கள் வந்துள்ளனர் என்பதையும் புரிந்துகொண்ட செல்லப்பிராணி ஒத்துழைப்பு கொடுத்தது.
இந்த நெகிழ்ச்சியான கதை அந்த சம்பவத்தைப் பார்த்த பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
மரணத்துக்குப் பின்னரும் தனது எஜமானர்களுக்கு காவல் காத்த அந்த விலங்கின் அன்பையும், விசுவாசத்தையும் புரிந்துகொண்ட அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.