புதுடெல்லி:
இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி துறையில் உள்ள ரூ.46 லட்சம் கோடி முதலீட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அழைப்பு விடுத்தார்.
இந்தியா எரிசக்தி வாரம் 2026 என்ற நிகழ்ச்சி கோவா மாநிலம் பனாஜியில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது: வரும் 2030-ம் ஆண்டுக்குள் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ரூ.9.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆண்டுக்கு 26 கோடி டன்னாக உள்ள நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் 30 கோடி டன்னாக உயர்த்தப்படும்.
இந்திய எரிசக்தி துறை எங்களது லட்சியங்களின் மையப்புள்ளியாக உள்ளது. இது ரூ.45.8 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே, இந்த வாய்ப்பை உலக முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் தயாரியுங்கள், இந்தியாவில் புதுமைகளைப் புகுத்துங்கள், இந்தியாவுடன் இணைந்து வளருங்கள், இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்பதுதான் என் கோரிக்கை.
எரிசக்தி துறையில் உலகின் முதல் ஐந்து ஏற்றுமதியாளர்களில் இந்தியா இடம் பிடித்துள்ளது.
எரிசக்தித் துறையைப் பற்றி கூற வேண்டுமென்றால், அதன் மதிப்புச் சங்கிலி முழுவதும் மகத்தான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.
உதாரணமாக, ஆய்வுத் துறையை எடுத்துக் கொண்டால், இந்தியா அதைப் பெருமளவில் திறந்துவிட்டுள்ளதுஆழ்கடல் ஆய்வு முயற்சிகளான ‘சமுத்ர மந்தன்’ திட்டம் குறித்து நீங்கள் அறிவீர்கள்.
இந்த தசாப்தத்தின் இறுதிக்குள், எங்களது எண்ணெய் மற்றும் எரிவாயு முதலீடுகளை ரூ.9.1 லட்சம் கோடியாக உயர்த்த முயற்சி செய்து வருகிறோம்.
எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுப் பரப்பை 10 லட்சம் சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்துவதே எங்கள் நோக்கம். இதற்காக ஏற்கனவே 170-க்கும் மேற்பட்ட பிளாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்தமான் நிக்கோபார் வடிநிலம் நமது அடுத்த ஹைட்ரோகார்பன் நம்பிக்கையாக உருவெடுத்து வருகிறது.
முந்தைய எரிசக்தி வார நிகழ்ச்சியில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளின்படி, விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆய்வுத் துறையில் முதலீடு செய்தால் உங்கள் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பது உறுதி.
எல்என்ஜி, கப்பல் கட்டும் துறைதிரவமயமாக்கப்பட்ட எரிவாயுக்கான (எல்என்ஜி) தேவை அதிகரித்து வருகிறது.
இந்தியா தனது மொத்த எரிசக்தி தேவையில் 15 சதவீதத்தை எல்என்ஜி மூலம் பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்காக எல்என்ஜி போக்குவரத்துக்குத் தேவையான கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் கப்பல் கட்டும் திட்டத்துக்காக ரூ.70,000 கோடி மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.