திருச்சி:
திருச்சியில் திமுக முன்னாள் எம்எல்ஏ பரணிகுமார் இல்ல திருமண விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து பரணிகுமாருடன் தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி முன்னாள் நகர்மன்ற தலைவர் பாலகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் திமுக எம்எல்ஏ பரணிகுமாரின் மகனுமான ஆதித்யா பாலா – மீனாட்சி ஆகியோரின் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், மதிவேந்தன், முதல்வரின் மனைவி துர்கா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருமணத்தை நடத்தி வைத்த பின் முதல்வர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: ”எல்லோரும் சொன்னது போல, திமுக வளர்வதற்கு, நம்முடைய இரு வண்ணக்கொடி இந்த வட்டாரத்திலே பரவுவதற்கு, காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர் நம்முடைய அருமை பெரியவர் பாலகிருஷ்ணன்.
அவர் இன்றைக்கு இல்லை என்று சொன்னாலும், அவருடைய அருமை மகனாக இருக்கக்கூடிய பரணிகுமார், அவர் விட்டுச் சென்றிருக்கக்கூடிய பணிகளையெல்லாம் எந்த அளவிற்கு இந்த இயக்கத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி இருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
பாலகிருஷ்ணனை பொறுத்தவரை சொல்ல வேண்டும் என்று சொன்னால் அண்ணாவோடு, கருணாநிதியோடு, மறைந்த நம்முடைய பொதுச் செயலாளராக இருந்து மறைந்த பேராசிரியரோடு, அதேபோல அன்பிலாரோடு எப்படி நெருக்கமாக இருந்தார் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
அவர் மாவட்டக் கழகத்தினுடைய பொருளாளராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியிலேயே சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். திமுக சொத்து பாதுகாப்பு உறுப்பினராகவும் இருந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றி இருக்கிறார்.
நேரு சொன்னது போல, எங்கும் வெற்றி பெற முடியாத நிலையிலேயே திருச்சி நகராட்சி மன்ற தலைவராக அன்றைக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெற்று அவர் இந்த வட்டாரத்திலேயே, இந்த நகராட்சிக்கு, திருச்சி மாநகரத்திற்கு பொதுமக்களுக்கு எப்படியெல்லாம் பணியாற்றி இருக்கிறார், கட்சிக்கு எப்படியெல்லாம் தொண்டாற்றி இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆக அப்பாவிற்கு தப்பாமல் பிள்ளையாக நம்முடைய பரணிகுமார் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பரணிகுமார் மாணவர் அணியிலே முதலில் பொறுப்பேற்று பணியாற்றினார். அதைத் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து கடமையை நிறைவேற்றி இருக்கிறார்.
தேர்தல் வேலையை எப்படியெல்லாம் ஆற்றி இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் பரணிகுமாரை பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், இங்கே எல்லோரும் சொன்னார்கள்.
என்னோடு 15 ஆண்டு காலம், 20 ஆண்டு காலம் என்னோடு சுற்றுப் பயணம் ஈடுபடுகிற போதெல்லாம் திருச்சிக்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய எல்லா மாவட்டங்களுக்கும் அவர் சுற்றுப் பயணத்திலே என்னோடு கலந்து கொண்டிருக்கிறார்.
மறைந்த என்னுடைய ஆருயிர் நண்பன் பொய்யாமொழியும் நம்முடைய பரணிகுமாரும் தான் எனக்கு துணையாக சுற்றுப்பயண நிகழ்ச்சிகளுக்கு வருவார்கள், தொடர்ந்து வருவார்கள்.
சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல என்னுடைய காரை அவர்தான் ஓட்டி வருவார். அவங்க அப்பாவோட கார் எடுத்துட்டு வந்துருவார்.
அந்த காரில்தான் தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணத்தை நடத்தி இருக்கிறேன். அவரோடு பயணம் செய்த போது எந்தவித அச்சமும் இல்லாமல் பயணம் செய்ய முடியும். இரவிலே விழித்துக் கொண்டிருப்பான், பகலில் தூங்குவார்.
இது எல்லாருக்கும் தெரியும், அதிகமா சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இரவிலே அசோக் குமார் இங்க வந்திருக்கிறார், அசோக் குமாருக்கு எல்லாம் தெரியும்.
ஏனென்றால் நாங்களெல்லாம் ஒரு செட் அப்போ. இளைஞரணி தொடங்கிய நேரத்தில் அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் நடத்துகிற நேரத்தில் அவர்தான் கார் ஓட்டிக்கொண்டு வருவார். அந்த கார் ஓட்டிக்கொண்டு வருவது பல நிகழ்ச்சிகள் எனக்கு அனுபவம் உண்டு.
நான் பல இடங்களிலே கழகக் கொடி ஏற்றுவதற்காக காரை விட்டு இறங்கி நான் பல கிராமங்களில் கொடி ஏற்றுவதுண்டு. அப்பொழுது அவர் காரிலே உட்கார்ந்திருப்பார். காரைச் சுற்றி தாய்மார்கள், சில பெரியவர்கள் எல்லாம் சுற்றி சூழ்ந்து நின்று கொண்டிருப்பார்கள். அப்பொழுது பரணியைப் பார்த்து சில பேர் பேசிக் கொண்டிருப்பார்களாம்.
நான் வந்தவுடன் பரணி என்னிடத்தில் அவரே சொல்லுவார், ‘தலைவரே, நீங்க கொடியேத்தப் போயிட்டீங்க, நான் கார்ல உட்கார்ந்திருந்தேன். காரைத் திருப்பி விட்டுட்டு உட்கார்ந்திருந்தேன்.
ஆனா இங்க சுத்தி இருந்தவங்க எல்லாம் என்ன பேசுறாங்க தெரியுமா? பாரு அவர் எவ்வளவு ஒல்லியா இருக்கிறாரு, காரை ஓட்டுற டிரைவர் எவ்வளவு குண்டா இருக்காரு பார்த்தியா? அப்படின்னு அவரே சொல்லுவார் இதை.
எதற்காகச் சொல்லுகிறேன் என்று சொன்னால் அந்த அளவிற்கு அவர் என்னோடு இருந்து பழகியவர்கள். அதுமட்டுமல்ல சுற்றுப்பயணம் நடத்துகிற போது பல இடங்களில் நாங்கள் இரண்டு மணிக்கு, மூன்று மணிக்குத்தான் உறங்குவது, தூங்குவதுண்டு.
அப்படித் தூங்குகிற நேரத்துல மறுநாள் காலை ஏழு மணிக்கு போக வேண்டும் என்ற நிகழ்ச்சி இருக்கும். அதனால சொல்லிவிட்டு தூங்குவோம், ஏழு மணிக்கு எழுப்பிவிடுப்பான்னு சொல்லுவோம்.
ஆனா அவரை யாரும் எழுப்ப முடியாது, நான்தான் போய் எழுப்பணும், அவர் வந்து எழுப்ப மாட்டார். அப்படித்தான் அப்படியெங்க பயணம் நடந்திருக்கிறது.
ஆக அந்தப் பயணங்களெல்லாம் மறக்க முடியாது. எத்தனையோ இருக்கு, அதையெல்லாம் சொன்னா அவர் மேடையிலேயே உட்கார்ந்திருக்க முடியாது இப்போ. அதையெல்லாம் சொல்ல விரும்பல.
ஆக எதற்காகச் சொல்லுகிறேன் என்று சொன்னால் அந்தளவிற்கு ஒரு அன்போடு இருந்து பழகியவர்கள். நாங்கள் திருச்சிக்கு வருகிற போதெல்லாம் பாலகிருஷ்ணனுடைய வீட்டுக்கு, பரணிகுமார் வீட்டுக்கு நான் செல்லாமல் இருந்ததில்லை. நாங்கள் அந்த அளவிற்கு பாசத்தோடு பழகக்கூடிய குடும்பம்.
ஆக அந்தக் குடும்பத்திலேயே இன்றைக்கு குலவிளக்குகளாக இருக்கக்கூடிய நம்முடைய மணமக்கள் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நாங்க எப்படிப்பட்ட நேரத்தில் வந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். தேர்தல் நெருங்கிக்கிட்டிருக்கு, இன்னும் இரண்டு மூணு மாசத்துல தேர்தல் நிச்சயமாக வரப்போகிறது.
இதற்கிடையிலேயே உங்களையெல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன் என்று சொன்னால், அந்தக் குடும்பத்தின் மீது நாங்கள் கொண்டிருக்கக்கூடிய பாசத்தின் காரணமாகத்தான் வந்திருக்கிறோம், வேறொன்றுமில்லை.
ஏற்கனவே ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் திருச்சிக்கு வந்து, தஞ்சைக்குப் போய் ஒரு மாநாட்டை நடத்தினோம் அதுவும் உங்களுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல மகளிர் அணி மாநாடு ஒரு பக்கம், இளைஞரணி மாநாடு ஒரு பக்கம். அடுத்து நிறைவாகத் தேர்தலுக்கு இதே திருச்சியில் 10 லட்சம் பேர் திரளக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய மாநாட்டை நம்முடைய அமைச்சர் நேரு நடத்த இருக்கிறார், அதுவும் உங்களுக்குத் தெரியும், அதை அறிவித்திருக்கிறோம்.
நாங்க தொடர்ந்து பிஸியா இருக்கிற நேரம் இப்போ. அப்படி பிஸியா இருக்கிற நேரத்தில் வந்திருக்கிறோம்னா நம்முடைய பரணிகுமார் மீது, பாலகிருஷ்ணன் குடும்பத்தின் மீது நாங்கள் வைத்திருக்கக்கூடிய பற்றின் காரணமாகத்தான், அந்த நட்பின் காரணமாகத்தான் வந்திருக்கிறோம்.
அந்த நட்பின் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய பரணிகுமார் இல்லத்தில் இருக்கக்கூடிய இந்த குலவிளக்குகள் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ வேண்டும். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய, ‘வீட்டிற்கு விளக்காய் நாட்டுக்குத் தொண்டர்களாய்’ மணமக்கள் வாழுங்கள் வாழுங்கள் வாழுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்” என்று முதல்வர் உரை நிகழ்த்தினார்.