சென்னை:
தைப்பூசம், வார இறுதி நாட்களை முன்னிட்டு வெள்ளி, சனிக்கிழமைகளில் 1,005 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜன.30-ம் தேதி (வெள்ளி), 31-ம் தேதி (சனி) மற்றும் பிப்.1-ம் தேதி (ஞாயிறு) வார விடுமுறை நாட்கள் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில்கொண்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30-ம் தேதி 360 பேருந்துகளும், 31-ம் தேதி 485 பேருந்துகளும் இயக்கப்படும்.
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 60 பேருந்துகளும், சனிக்கிழமை 60 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து வெள்ளியன்று 20 பேருந்துகளும், சனிக்கிழமை 20 பேருந்துகளும் இயக்கப்படும்.
அதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை பயணம் செய்ய 4,132 பேரும், சனிக்கிழமையன்று 4,175 பேரும், ஞாயிற்றுக்கிழமையன்று 8,256 பேரும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.