சென்னை:
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்வரை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள். எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயரதிகாரிகள் மரியாதை செலுத்தினர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதேபோல், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு தலைமையில் காந்தியின் படத்துக்கு நிர்வாகிகள் மரியாதை செலுத்தி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
காந்தியின் நினைவுதினத்தையொட்டி தலைவர்கள் தெரிவித்துள்ளதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: உண்மை, அகிம்சை மற்றும் தன்னலமற்ற சேவையின் வழிகாட்டியான காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
தியாகம், சத்தியாகிரகம் மற்றும் தார்மீக துணிச்சல் நிறைந்த அவரது வாழ்க்கை தேசத்தின் உணர்வை தட்டி யெழுப்பி, ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்தியது.
காந்தியின் லட்சியங்களை பின்பற்றி நீதி சார்ந்த, கருணை, அனைவரையும் உள்ளடக்கிய ஆன்மிகம் மற்றும் கலாச்சார மரபுகளில் அவர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைதி வழியின் வலிமையை உலகுக்கு காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்க பாடுபட்டதால் கோட்சேவின் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட மகாத்மா காந்தி, ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார். மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்கு தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணை காத்திடுவோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அகிம்சையும், உண்மையும்தான் உலகத்தை மாற்றும் என்ற நம்பிக்கையோடு, நம் நாட்டின் கொள்கை வழிகாட்டியாக விளங்கும் மகாத்மா காந்தியின் நினைவு நாளில், மனித நேயத்தின் உயர்ந்த சின்னமான அவரது தியாக பெருவாழ்வை போற்றி வணங்குகிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: காந்தியின் நினைவு நாளில், அவரது லட்சிய கனவான கிராம முன்னேற்றம், விவசாய வளர்ச்சி, தற்சார்பு கொள்கை, தூய்மை பாரதம் போன்றவற்றை கொண்ட ராம ராஜ்ஜியம் கனவை நினைவாக்கி நடைமுறைப்படுத்தி வரும் பிரதமர் மோடி தலைமையில், காந்தியின் லட்சியங்கள் மேன்மேலும் நிறைவேற உறுதியேற்போம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: எளிமை, கொள்கை தெளிவு, நேர்மையான பார்வை ஆகியவற்றோடு சாதி, மத, பேதமற்ற சமுதாயத்துக்காகவும், மானுட நலனுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த காந்தியின் நினைவை எந்நாளும் போற்றிடுவோம்.