சென்னை:
சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக-வில் 234 தொகுதிகளுக்கும் 72 பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்த 234 தொகுதிகளிலும் தலைவர்களின் சுற்றுப்பயணத்துக்கு பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக 72 சுற்றுப்பயணப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொகுதி வாரியாகச் சென்று, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிதல், சமுதாயத் தலைவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், கட்சி நிர்வாகிகளுக்குத் தேர்தல் உத்திகள் குறித்து ஆலோசனைகளை வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்வார்கள்.
அந்தவகையில், ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் குறைந்தது 2 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை, எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, பேராசிரியர் ராம.சீனிவாசன், வினோஜ் பி.செல்வம், ஏ.அஸ்வத்தாமன், அமர் பிரசாத் ரெட்டி, நாராயணன் திருப்பதி, எஸ்.ஜி.சூர்யா, கே.டி.ராகவன், பிரமிளா சம்பத், சதீஷ்குமார், சுமதி வெங்கடேசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 72 நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.