மெல்பர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் முதல் நிலை வீராங்கனையும், பெலாரஸைச் சேர்ந்தவருமான அரினா சபலென்காவும், 5-ம் நிலை வீராங்கனையான எலினா ரைபகினாவும் மோதினர்.
இதில் எலினா ரைபகினா 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் அரினா சபலென்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.
அவர் முதன்முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் தனது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்பு 2022-ல் அவர் விம்பிள்டன் ஓபனின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றிருந்தார்.
போட்டியின் முதல் செட்டில் மிகச்சிறப்பாக விளையாடிய ரைபகினா செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டில் அரினா சபலென்கா சுதாரித்து விளையாடி அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார்.
இதனால் வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் அனல் பறக்கும் போட்டி நடைபெற்றது. இருந்தபோதும் அரினா சபலென்காவின் சர்வீஸ்களை எளிதில் முறியடித்த ரைபகினா 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார். 2 மணி நேரம் 18 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தப் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் எலினா ரைபகினா 2 ஆயிரம் டபிள்யூடிஏ புள்ளிகளையும் பெற்றுள்ளார். 2-வது இடம் பிடித்த அரினா சபலென்காவுக்கு 1,300 புள்ளிகள் கிடைத்துள்ளன.
பரிசுத்தொகை: இந்தப் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் சுமார் ரூ.26 கோடி பரிசை ரைபகினா வென்றுள்ளார். 2-ம் இடம் பிடித்த அரினா சபலென்காவுக்கு சுமார் ரூ.13 கோடி பரிசு கிடைத்துள்ளது.