குழந்தை பாலமுருகனுடன் காட்சி தரும் நீலோத்பலாம்பாள் புராணம், வரலாறு!!

பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது.

‘திருவாரூர் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்’ என்று சுந்தரர் தேவாரத்தில் புகழ்ந்து பாடியுள்ளார்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் உலக அளவில் பிரபலமான, பிரமாண்டமான தேராகும்.

‘ஆழி’ என்பதற்கு பரந்து விரிந்த அளவிட முடியாத என்பது பொருள். இதனால் கடலுக்கு ‘ஆழி’ என பெயர் வந்தது. இதில் அளவில் பெரியதும், புராணம், வரலாற்று சிறப்புடையதுமான தேர் என்பதால் திருவாரூர் தேருக்கு ‘ஆழித்தேர்’ என பெயர் வந்தது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு என்று பல சிறப்பம்சங்கள் உள்ளன. அன்னை பராசக்தி இத்தலத்தில் வீற்றிருக்கும் திருக்கோலங்களுக்கு என்று தனி மகத்துவம் உண்டு.

இங்கு அன்னை பராசக்தி கமலாம்பிகையாகவும், நீலோத்பலாம்பாளாகவும் இருவேறு திருக்கோலங்களில் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கிறார். திருவாரூர் தியாகராஜர் கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது கமலாம்பிகையின் தனிக்கோவில்.

இங்கு அம்பிகை தனது தலையில் ஈசனைப் போன்று கங்கையையும், பிறையையும் தரித்து யோகாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

பராசக்தி பீடங்களுள் ஒன்றான கமலாம்பிகை கோவிலின் மேற்கு மூலையில் ‘அக்சர’ பீடம் உள்ளது. இதில் பீடமும், 51 எழுத்துகள் எழுதப்பட்ட திருவாசியும் உள்ளன. இங்கு வந்தால் சில நிமிடங்கள் நின்று தியானித்து செல்ல வேண்டும்.

கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் நீலோத்பலாம்பாளுக்கு தனிக்கோவில் உள்ளது. அங்கு நின்ற கோலத்தில் அருள்புரியும் நீலோத்பலாம்பாள் திருக்கரத்தில் கருங்குவளை மலர் ஏந்தி உள்ளார்.

இந்த அம்பிகையின் அருகே தோழி ஒருத்தி தமது தோள் மீது பாலமுருகனை சுமந்திருக்க முருகனின் சுட்டு விரலை தனது இடது கரத்தால் பற்றி நிற்கிறார் அம்பிகை.

வேறு எந்த தலத்திலும் அம்பிகையின் இந்த அற்புத கோலத்தை தரிசிக்க முடியாது. நீலோத்பலாம்பிகை தன் இளைய பிள்ளையோடு எழுந்தருளி உள்ள காட்சியானது இல்லற வாழ்வின் மாண்பை உணர்த்துகிறது. இந்த அன்னை, இல்லற வாழ்வு அமைதியாக, ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அருள்புரிகிறார்.

அதேபோல துறவற வாழ்க்கையை விரும்பும் பக்தர்களுக்கு யோகாசனத்தில் வீற்றிருக்கும் கமலாம்பிகை அருள்பாலிக்கிறார்.

தனிக்கோவிலில் தவக்கோலத்தில் காட்சி தரும் கமலாம்பிகை பாசம், தாமரை, அபயம் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். திருவாரூரில் அன்னை பராசக்தி இருவேறு திருக்கோலங்களில் காட்சி தருவதற்கு காரணம் உண்டு.

குழந்தை பாலமுருகனுடன் காட்சி தரும் நீலோத்பலாம்பாள் இம்மை வாழ்க்கையின் தத்துவ விளக்கமாகும்.

கமலாம்பிகை தவத்திருக்கோலத்தில் காணப்படுவது மறுமைக்கு வழிகாட்டும் தத்துவமாகும். இம்மைக்கும், மறுமைக்கும் அருளதிகாரியாக அன்னை பராசக்தி திகழ்கிறாள் என்ற தத்துவ விளக்கமாகவே அன்னை பராசக்தி திருவாரூரில் இருவித கோலங்களுடன் எழுந்தருளி காட்சி தருவதாக ஐதீகம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *