தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னதாகவே முக்கிய அரசியல் கட்சிகள் போட்டிக்குப் போட்டி போஸ்டர் யுத்தத்தை தொடங்கி சுவாரஸ்யமாக நடத்திக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் முட்டை படம் போட்ட போஸ்டர்கள் அண்மையில் ஒட்டப்பட்டன. ‘முட்டை’ என்ற தலைப்பில் ‘பாஜக – அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி’ என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர்கள் சென்னையில் தயாராகி தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது டபுள் இன்ஜின் ஆட்சி குறித்து பேசியதை விமர்சித்து, ‘டபுள் இன்ஜின் டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது’ என்ற வாசகங்களுடன், துருப்பிடித்த ரயில்பெட்டியில் மோடி, பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொங்கிக் கொண்டு வருவது போன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்கு எதிர்வினையாக, ‘அப்பா ஆட்சி டப்பா ஆட்சி’ என்ற தலைப்பிட்டு தமிழக முதல்வர், துணை முதல்வர், கனிமொழி மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுடன், அதிமுக ஐடி விங் சார்பில் திருநெல்வேலி முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இப்படி, ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் மாறி மாறி போஸ்டர் யுத்தம் நடத்திக் கொண்டிருக்க, பாஜக தரப்பிலும், ‘மக்களே சிந்திப்பீர்… உள்ளாட்சித் துறையில் ஒரு ஊழல் துரை, நெல்லை பொறுப்பு அமைச்சர் கொடுத்த ஊழல் அல்வா’ என்ற வாசகங்களுடன் அமைச்சர் நேருவின் கார்ட்டூனைப் போட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சற்று நேரத்திலேயே நெல்லை போலீஸார் கருமமே கண்ணாக கவனித்து அத்தனை போஸ்டர்களையும் கிழித்தெறிந்தனர்.
இதனிடையே, ‘விடியா ஆட்சி, உங்கள் வீட்டு பில்லே சாட்சி’ என்ற பிரச்சாரத்தை அதிமுக தலைமை அறிவித்ததுமே அதிமுக-வினர் பாளையங்கோட்டை பகுதியில், அந்த வாசகங்களை பில்களில் அச்சிட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை விதமான போஸ்டர்கள் முளைக்கப் போகின்றனவோ!