சென்னை:
வருமான வரி வழக்கில் நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015-16-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.
வருமானத்தை மறைத்ததற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்தது.
தனக்கு அபராதம் விதித்து வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமான வரித் துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் கடந்த 23ம் தேதி நடந்தது.
அப்போது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30-ம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
வருமான வரித் துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், ஆறு மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து சரிதான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், வருமான வரி வழக்கில் நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது செல்லும் என தெரிவித்துள்ளது.