திருச்சி
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு நடத்துவதில் ஏற்பட்ட குளறுபடியில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இப்படி போட்டித் தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாத நிர்வாகத் திறமையற்ற அரசாக திமுக உள்ளது. டிஜிபி நியமனம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் கூட யுபிஎஸ்சி தேர்வு செய்து அனுப்பிய பட்டியலில் ஒருவரைக் கூட தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கவில்லை.
மூச்சுக்கு 300 முறை இண்டியா கூட்டணி என்று கூறி வந்த ஸ்டாலின் இன்று அதுகுறித்து வாயே திறப்பதில்லை. திமுக- காங்கிரஸ் இடையே பூசல் வந்துவிட்டது. திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படும்.
அப்படித்தான் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. அண்மையில் கனிமொழி டெல்லிக்கு சென்று ராகுலை சந்தித்து பேசியும் தீர்வு காண முடியவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட காங்கிரஸ் குழு இதுவரை ஏன் பேசவில்லை.
என்டிஏ கூட்டணி பொருந்தும் கூட்டணியா? இல்லையா? என ஸ்டாலின் முடிவு செய்ய முடியாது. மக்கள் தான் முடிவு செய்வர். தேர்தலுக்குப் பிறகு யார் 200 தொகுதியில் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அதிமுக- பாஜக கூட்டணியில் சேர மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுகவுக்கு திட்டங்களுக்கு பெயர் வைப்பது தவிர வேறு வழியில்லை. திட்டங்களுக்கு பெயர் வைப்பதற்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் அது ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும்.
விஜய் ஊழல்வாதி என்பதில் அவர் ரூ.1.50 கோடி வரி கட்டாததே சாட்சி. நீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துள்ளது. ஏதோ ஒரு கட்சி ஆரம்பித்தார். கரூரில் நடக்கக்கூடாத சம்பவம் நடந்துவிட்டது.
அதன் பிறகு அவர் 72 நாள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஒரு சம்பவம் நடந்த பிறகு துணிந்து நின்று அதற்கு தீர்வு காண்பது தான் ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு கடமை.
அப்போது அலுவலகத்தை கூட மூடிவிட்டனர். இது தான் அந்த கட்சியின் நிலைமை. இதுவரை 181 தொகுதியில் எழுச்சிப் பயணம் முடித்துள்ளேன்.
வரும் 15-ம் தேதி பவானிசாகரில் பயணம் தொடங்கி, தொடர்ந்து சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதியில் பிரச்சாரம் நடத்தப்படும்.
செங்கோட்டையன் செல்லாத நோட்டு. அவரைப் பற்றி பேசி பிரயோஜனம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நடைபெற்ற திருமண விழாவில் பழனிசாமி பேசும்போது, ‘‘அதிமுக ஆட்சி முடிவடையும்போது 2021-ம் ஆண்டில் ரூ.5 லட்சத்து 18 ஆயிரம் கோடி தான் கடன் இருந்தது.
கரோனா காலத்தில் அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி செலவு ஏற்பட்டது. இப்படியான சூழலிலும் சிறப்பான ஆட்சியை அதிமுக அரசு வழங்கியது.
2021-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், இதுவரை ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். மக்களின் தலைகளில் கடனை சுமத்தியது தான் ஸ்டாலின் அரசின் சாதனை’’ என்றார்.