யாரையும் அடிமைகளாக நடத்தும் பழக்கம் திமுக-வுக்கு எந்தக் காலத்திலும் இல்லை – அமைச்சர் ரகுபதி!!

சென்னை

ஆட்சியில் பங்கு கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


அமெரிக்காவுடனான பிரதமர் மோடி செய்துள்ள வர்த்தக ஒப்பந்தம் மூலம் இறக்குமதி வரியை 18 சதவீதமாக குறைத்து விட்டோம் என தம்பட்டம் அடிக்கிறார்கள். இதனால் அதானிக்கும் அம்பானிக்கும் ஆதாயமே தவிர, நாட்டு மக்களுக்கு ஆதாயம் இல்லை.

தவெக-வுக்கு 42 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக செங்கோட்டையன் கூறி இருக்கிறார். ஆனால், அதில் தலை கீழ் எண்ணான 24 சதவீதம்கூட இருக்காது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருப்பது திராவிட மாடல் அரசுதான். இது தெரியாமல், பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதாக பாமக அன்புமணி பேசி இருக்கிறார்.

அவர் ஒன்றும் பொருளாதார மேதை அல்ல. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக திமுக ஏன் குழு அமைக்கவில்லை என்று கேட்போருக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது.

சரியான நேரத்தில் திமுக குழு அமைக்கும். திமுக தலைவர் வியூகங்களை அமைத்து கூட்டணியை முடிவு செய்வார். ஆட்சியில் பங்கு கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. கொடுக்கும் இடத்தில் திமுக தலைவர் இருக்கிறார்.

திமுக-வில் கூட்டணி கட்சித் தலைவர்களை சம அளவில்தான் வைத்துள்ளோம். யாரையும் அடிமைகளாக நடத்தும் பழக்கம் திமுக-வுக்கு எந்தக் காலத்திலும் இல்லை. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வை நேர்மையாகத்தான் நடத்தி வருகிறோம். முறைகேடாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை. திறமையானவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *