சென்னை:
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குற்றக் குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பல்வீர் சிங், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பதியப்பட்ட நான்கு வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பல்வீர் சிங்குக்கு எதிரான புகார் குறித்து விசாரித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்ட குழு, அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என அறிக்கை அளித்திருந்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், பல்வீர் சிங்குக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடத்த, குற்றக் குறிப்பாணை அனுப்பப்பட்டது.
இந்த குற்றக் குறிப்பாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், தற்போது ஈரோடு சிறப்பு அதிரடிப்படை உதவி கண்காணிப்பாளராக பணியாற்றும் பல்வீர் சிங், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தனக்கு எதிராக விசாரணை நடத்திய அதிகாரியே, தற்போது குற்றக் குறிப்பாணையை பிறப்பித்துள்ளார்.
தனக்கு எதிரான நான்கு குற்ற வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ள நிலையில், துறை ரீதியான விசாரணை காரணமாக பதவி உயர்வு உள்ளிட்ட பணி பலன்கள் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 23 ம் தேதிக்கு தள்ளிவைத்தது.