கோவை:
உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் வழங்காததால், ஐ.ஜே.கே கட்சியில் இருந்து விலகுவதாக லீமாரோஸ் மார்ட்டின் அறிவித்துள்ளார். அவர் அதிமுக அல்லது தவெகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின். இவரது மனைவி லீமாரோஸ் மார்ட்டின். இவர் ஐ.ஜே.கே எனப்படும் இந்திய ஜனநாயக கட்சியில், இணை பொதுச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் லீமாரோஸ் மார்ட்டின் கட்சியை விட்டு வெளியேறி மாற்றுக் கட்சியில் இணையக்கூடும் என பேச்சுகள் எழுந்து வந்தன.
அதேபோல், சில வாரங்களுக்கு முன்னர், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை லீமா ரோஸ் மார்ட்டின் சந்தித்துப் பேசினார். அது தொடர்பான புகைப் படங்கள் வெளியான போது, அவர் அதிமுகவில் இணைந்து விட்டார் என தகவல்கள் பரவின.
ஆனால்,”அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு’ எனக்கூறி அவ்விவகாரத்துக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார் லீமாரோஸ் மார்ட்டின்.
இந்நிலையில், கட்சி தலைமை மீது அதிருப்தி அதிகரித்ததால், ஐ.ஜே.கே. கட்சியில் இருந்து விலகுவதாக லீமாரோஸ் மார்ட்டின் இன்று (பிப்.10) அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”இன்று நான் எடுத்திருக்கும் ஒரு முக்கிய முடிவை அனைவரிடமும் அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
2012ம் ஆண்டு துவங்கி இன்று வரை ஏறக்குறைய 14 ஆண்டு காலமாக இந்திய ஜனநாயக கட்சியில் பெரும் அர்ப்பணிப்போடு பயணித்து வந்திருக்கிறேன். 2012-ல் துணைப் பொதுச் செயலாளர் ஆகவும், 2019-ம் ஆண்டு முதல் இணைப் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன்.
மேம்போக்காக அல்லாமல் களத்தில் இறங்கி கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு இருக்கிறேன். நம் சமூகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் வலிமையாக குரல் கொடுத்துள்ளேன்.
சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளேன். எனது மேற்பார்வையில் இந்திய ஜனநாயக கட்சியை கட்டமைப்பு ரீதியாக தமிழ்நாடு முழுவதும் வலுப்படுத்தி இருக்கிறேன்.
தமிழ்நாடு மட்டுமின்றி அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களிலும் எனது தலைமையில் பல்லாயிரக்கணக்கான புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்துள்ளேன். தமிழ்நாட்டில் நான் செல்லாத கிராமமே இல்லாத அளவில் அனைத்து இடங்களுக்கும் பயணித்திருக்கிறேன்.
இது மட்டுமல்லாமல் தேர்தல் காலங்களின் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஐ.ஜே.கே வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு இருக்கிறேன்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக ஒரே நாளில் 67 கிராமங்களுக்கு சென்று பரப்புரையில் ஈடுபட்டது எனது தனிப்பட்ட சாதனையாக நான் கருதுகிறேன்.
இவ்வாறு நேரம் காலம் பார்க்காமல் நான் உழைத்த கட்சி என் உழைப்பை அங்கீகரிக்கவில்லை என்பதும், சமீப காலமாக எனது உழைப்பை உதாசீனப்படுத்தியதும் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோன்று பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும், பொது வாழ்வில் துணிச்சலோடும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும் என்று நான் செல்லும் இடம் எங்கிலும் சந்திக்கும் பெண்களை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறேன்.
இதுபோன்ற சூழலில் இக்கட்சி ஒரு பெண்ணின் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரத்தை வழங்காதது பெரும் ஏமாற்றமே.
கட்சியின் தொண்டர்களான, நமது சமூக சொந்தங்களை விட்டு பிரிய மனமில்லாமல் என்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி 8 மாத காலம் காத்திருந்தேன். கட்சித் தலைமையில் இருந்து எந்த ஒரு முறையான பதில் வராத காரணத்தினாலும், சில சமீப கால கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலும் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுக்க நான் தள்ளப்பட்டுள்ளேன்.
இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகினாலும் எனது அரசியல் பயணமும், மக்கள் சேவையும் தொடரும் என தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக அல்லது தவெகவில் இணைய திட்டம்: ஐ.ஜே.கே-வில் இருந்து விலகிய லீமாரோஸ் மார்ட்டின் அதிமுக அல்லது தவெக கட்சியி்ல் இணைய திட்டமிட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
2 வாரம் கழித்து மாற்றுக் கட்சியில் இணைவது குறித்து செய்தியாளர்களை சந்திப்பதாகவும் லீமாரோஸ் மார்ட்டின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற லீமாரோஸ் மார்ட்டின் திட்டமிட்டுள்ளார்.
எனவே, அதற்கான சரியான பாதையாக அதிமுக அல்லது தவெக இருக்கும் என அவர் கருதுகிறார். அதிமுக கோவையில் வாக்குவங்கி பலமாக உள்ள கட்சியாகும். எனவே, அதிமுகவில் இணைந்து கோவையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதே சமயம், இவரது மருமகன் ஆதவ் அர்ஜூன தவெகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், அங்கு சேரலாமா எனவும் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.