கோவை,

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம் பொலிவாக்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட காளப்பட்டி சாலை சுகுணா கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் பவன்குமார் கி. கிரியப்பனவர் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாநகர மேயர் கா.ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். கலெக்டர் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து உணவு அருந்தினார்.
இந்த திட்டத்தின் மூலம், கோவை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வார்டுகளில் கழிவறை பராமரிப்பு பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 9,454 பேர் பயன்பெறுவார்கள்.
நிகழ்ச்சியில், துணை மேயர் ரா. வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் குமரேசன், சுல்தானா, தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் மோகன், உதவி நகர்நல அலுவலர் பூபதி, மண்டலக்குழுத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும், அந்தந்த வார்டு மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.