கோவை:
கோவையில் நடந்த விழாவில் தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தே.மு.தி.க சார்பில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறோம். 3-ந்தேதி கும்மிடிப்பூண்டியில் எங்களது பிரசாரம் தொடங்குகிறது. ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் இந்த பிரசார பயணத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம்.
தமிழகம் முழுவதும் இந்த சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து பேச உள்ளார்.
முதற்கட்டமாக வருகிற 3-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சில தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.
கட்சியை வலுப்படுத்துவதற்கும், மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் எங்களது சுற்றுப்பயணம் இருக்கும்.
ஜனவரி மாதம் 9-ந்தேதி கடலூரில் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் நாங்கள் யாருடன் கூட்டணி என கூறுவோம் என ஏற்கனவே பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார். அன்றைய தினம் நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்க போகிறோம் என்பது தெரியும்.
வருகிற 5 மாதங்களும் கட்சி பணிகளையும், மக்கள் பிரச்சனைகளையும், கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதும் தான் எங்களுடைய எண்ணம். அதனை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.
கமல்ஹாசன் எம்.பி. ஆனதை நாங்கள் வரவேற்கிறோம். நீண்ட நாட்கள் சினிமா துறையில் சாதித்து விட்டு தற்போது அரசியலுக்கு வந்துள்ளார்.
அவருக்கு தி.மு.க. சார்பில் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனையை கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டு பிரதமர் மோடியை தே.மு.திக சார்பில் யாரும் சந்திக்கவில்லையே என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் நாங்கள் இருக்கிறோமா? என கேள்வி எழுப்பினார்.
நாங்கள் கூட்டணியில் இருக்கும் பொழுது பிரதமர் எங்களை வந்து பார்க்கலாம் அல்லவா? பிரதமரை மரியாதை நிமித்தமாக தேவையான சமயங்களில் சந்திப்போம். எங்களுக்கு எப்போது தேவையோ அப்போது சந்திப்போம். பிரதமர் மோடி தற்போது பிரதமராக வந்து மக்கள் பணி செய்துள்ளார். ஜனவரி மாதம் கூட்டணி முடிவானவுடன் மற்றவற்றை கூறுவோம்.
தே.மு.தி.க பார்வையில் தமிழக வெற்றிக்கழகம் எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு தே.மு.தி.க பார்வை மக்களை நோக்கி மட்டும் தான் உள்ளது. வேறு எதை நோக்கியும் இல்லை என்றார்.
குடும்ப நிகழ்ச்சிக்கு செல்கிறாயோ இல்லையோ, ஆனால் கட்சிக்காரர்கள் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என எனது அப்பா எப்போதுமே சொல்லுவார்.
அப்பாவின் வார்த்தைப்படி நாங்கள் பயணப்பட்டு வருகிறோம். தேதி கொடுத்து விட்டால் கண்டிப்பாக வந்து விட வேண்டும் என கூறி துளசி வாசம் மாறும். ஆனால் தவசி வாக்கு மாறாது என தந்தையின் வசனத்தை மேற்கொள் காட்டினார்.
நீங்கள் விஜயபிரபாகரன் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அப்பா நம்மை விட்டு எங்கும் செல்லவில்லை. நம்முடனே தான் இருக்கிறார். அவர் வீட்டு சென்ற வேலைகளை மகன்களாகிய நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
தே.மு.தி.க என்பது கிளப் இல்லை. அது ஒரு கட்சி. கேப்டன் விஜயகாந்தின் கனவும், ரோட்டரி கிளப் உங்களின் கனவும் ஒன்றுதான். நீங்கள் கிளப்பாக செயல்படுகிறீர்கள். அப்பா கட்சியாக அதனை செய்தார். அப்பா விட்டு சென்ற செயல்களை நான் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
அந்த தேரை இழுக்க நான் தயாராக இருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்யும் போது அவர்களது முகத்தில் இருக்கும் புன்னகை தான் எங்களது மகிழ்ச்சியே.
முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது, முடியும் என்பது அறிவாளிக்கு சொந்தமானது என அப்பா கூறுவார். இங்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை அழைத்ததற்கு நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.