தேசிய கீதத்துக்கு முன்பாக அரசு விழாக்கள், பள்ளிகளில் வந்தே மாதரம் பாட வேண்டும்- மத்திய அரசு புதிய உத்தரவு!!

புதுடெல்லி:
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் எப்போது பாடப்பட்டாலும் அல்லது இசைக்கப்பட்டாலும் பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

தேசிய கீதம் மற்றும் ‘வந்தே மாதரம்’ இரண்டும் ஒரே நிகழ்வில் பாடப்பட்டால், முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும். 1937-ம் ஆண்டு காங்கிரசால் நீக்கப்பட்ட 4 சரணங்கள் உட்பட ‘வந்தே மாதரம்’ பாடலின் 6 சரணங்களும் அதிகாரப்பூர்வ விழாக்களில் இசைக்கப்படும். பாடலைப் பாடுவதற்கான மொத்த கால அளவு 190 வினாடிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொடியை ஏற்றும் போதும், முறையான நிகழ்வுகளில் ஜனாதிபதி வருகை மற்றும் புறப்படும் போதும், ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் கவர்னர்கள் முறையான மாநில விழாக்களுக்கு வரும்போது அல்லது புறப்படும்போது, பொதுமக்கள் விருது வழங்கும் விழாக்களின் போது மற்றும் தேசியக் கொடி அணி வகுப்பின்போது இந்தப் பாடல் இசைக்கப்பட வேண்டும். எனினும், சினிமா தியேட்டர்களில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.

ஏற்கனவே தேசத்தின் மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம் 1971 தேசிய கீதத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டு உள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 51(ஏ) தேசிய கீதத்திற்கு மரியாதை காட்ட மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று கூறுகிறது.

வங்கமொழிக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875 நவம்பர் 7-ம் தேதி ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதினார்.

இந்த பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இப்பாடல் மிகுந்த உத்வேகம் அளித்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1950 ஜனவரி 24-ம் தேதி இது தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது.

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் தற்போது அரசு விழாக்கள், பள்ளிகளில் இதனை பாட வழிகாட்டுதல்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

வந்தே மாதரம் பாடலுக்கான புதிய வழிகாட்டுதல்கள் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசு ‘வந்தே மாதரத்தை’ ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *