சென்னை:
அமெரிக்காவின் கேஎல்ஏ கார்ப்பரேசன் நிறுவனம் ரூ.3,510 கோடி முதலீட்டு பொறுப்புறுதியுடன் சென்னையில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கேஎல்ஏ கார்ப்பரேஷன், செமிகண்டக்டர் துறைக்கான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் உலகளாவிய முன்னணி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், சிப் உற்பத்தியில் பயன்படும் ஆய்வு, அளவீடு மற்றும் தரவு பகுப்பாய்வு அமைப்புகளை உருவாக்குகிறது.
இதன் தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர் தயாரிப்புகளின் தரம், செயல்திறன் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்த உதவுகின்றன. உலகம் முழுவதும் உள்ள முன்னணி சிப் உற்பத்தியாளர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவைகளை வழங்கி, புதிய தலைமுறை செமிகண்டக்டர் வளர்ச்சியில் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில், கேஎல்ஏ கார்ப்ப ரேசனின் துணை நிறுவனமான கேஎல்ஏ இந்தியா நிறுவனம் ரூ.3,510 கோடி முதலீட்டு பொறுப்புறுதியுடன் சென்னையில், ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க வளாகத்தை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில், 12 ஏக்கர் நிலப்பரப்பளவிலான இந்த வளாகத்தில், உயர் செயல்திறன், கணினி தொழில்நுட்பம், செயல்முறை கட்டுப்பாடு, பொறியியல் மென்பொருள் போன்ற துறைகளில், மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
இதன்மூலம், அடுத்த 10 ஆண்டுகளில், 4 ஆயிரம் உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில்துறை செயலர் வி.அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது மற்றும் கேஎல்ஏ நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர்.