சென்னை:
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முதலில் திட்டமிட்டார் சிவகார்த்திகேயன்.
ஆனால், அப்படம் தயாராக நீண்ட நாட்களாகும் என்பதால், அத்துடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் ஒரு படத்தினை ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ளார்.
இப்படத்துக்கான ப்ரோமோ படப்பிடிப்பு மதுரையில் முடிந்துவிட்டது. இதனை சிவகார்த்திகேயனே தயாரிக்கவுள்ளார். இதில் நாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
அவர் அறிமுகமாகும் நேரடி தமிழ் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. ‘காந்தா’ படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் பாக்யஸ்ரீ போஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க கிராமத்து பின்னணியில் நடைபெறும் கதை என்பதால், இப்படத்தினை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இதன் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.