சென்னை:
தமிழக அரசின் சார்பில் 2016 முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான திரைப் பட விருதுகள், 2014 முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் 2021-22-ம் கல்வி ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன.

விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், விக்ரம் பிரபு உள்ளிட்டோரும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், அபர்ணா பாலமுரளி, சாய்பல்லவி, மஞ்சு வாரியர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகளைப் பெற்றனர்.

நகைச்சுவை நடிகருக்கான விருதை யோகிபாபு, கோவை சரளா பெற்றனர். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், ஹிப்ஹாப் ஆதி, சாம் சி.எஸ். ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் ‘கனா’ படத்துக்கான விருதை, அதன் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.
அவரது மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், அந்த படத்துக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றார். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய் பீம், கார்கி உள்ளிட்ட படங்கள் விருதுகளை வென்றன. சின்னத்திரை பிரிவில் அழகி, ரோஜா, வாணி ராணி, எதிர்நீச்சல் தொடர்களுக்கு சிறந்த நெடுந்தொடருக்கான விருது கிடைத்தது.

சின்னத்திரை கதாநாயகன், கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நெடுந்தொடர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கே.ஆர்.விஜயா, எஸ்.வி.சேகர், எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 223 திரைப்படக் கலைஞர்கள், 180 சின்னத்திரைக் கலைஞர்கள், 30 மாணவர்கள் என 433 பேர் விருதுகளைப் பெற்றனர்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நானும் உங்களில் ஒருவனாக, இந்தத் துறையில் இருந்து வந்தவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பள்ளி வகுப்பறைக்குத் திரும்பிய மாணவனைப் போல உணர்கிறேன். அண்ணா, கருணாநிதி ஆகிய இருவரும் கலைத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர்கள். தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியவர்கள்.

நம் முதல்வரும் திரைத் துறை, சின்னத்திரையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இன்று தொழில்நுட்ப ரீதியாகவும், கதைக் களத்திலும் நாட்டுக்கே ஒரு ‘ட்ரெண்ட் செட்டராக’ தமிழகம் விளங்குவதற்கு இந்த அடித்தளமே காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, கயல்விழி, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.