புதுச்சேரி:
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்.14) வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் 4,43,595, பெண்கள் 5,00477, மூன்றாம் பாலினத்தவர்-139 பேர் என மொத்தமாக 9,44,211 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் 42,719 தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் 16,619 தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இது குறித்து புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, 1.1.2026-ஐ தகுதி தேதியாக கொண்டு, அக்.27-ம் தேதி முதல் பிப்.14-ம் தேதி வரை புதுச்சேரி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியல் திருத்த பணியில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் நேரில் வழங்கப்பட்டு சேகரிக்கப்பட்ட பதிவு படிவங்கள் மூலம் வாக்காளர்களின் 100 சதவீதம் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த விரிவான பயிற்சியின் விளைவாக, இறந்தவர்கள், நிரந்தரமாக பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்கள் மற்றும் நகல் சேர்க்கை வழக்குகள் உட்பட கணிசமான எண்ணிக்கையிலான தகுதியற்ற வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு தீவிர திருத்த பணியின் கீழ் கணக்கெடுப்பு கட்டத்திற்கு பிறகு டிச.16-ம் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.
அக்.27-ம் தேதி அன்று வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த 10,21,578 வாக்காளர்களில், மொத்தம் 1,03,467 தகுதியற்ற வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, டிச.16-ம் தேதி முதல் ஜன.19-ம் தேதி வரை உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டது.
இதில் 42,719 தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் 16,619 தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
அதன்படி, இன்று தகுதியுள்ள வாக்காளர்களின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட பட்டியலுடன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, ஆண்கள் 4,43,595, பெண்கள்-5,00477, மூன்றாம் பாலினத்தவர்-139 என மொத்தமாக 9,44,211 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 23,033 பேர், மாற்றுத்திறனாளிகள்-12,204 பேர், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் வாக்காளர்கள்-6,034 பேர் அடங்குவர்.
இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
மேலும், இறுதி வாக்காளர் பட்டியல், விடுமுறை நாட்களை தவிர்த்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் உள்ள வாக்காளர் வசதி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்கும்.
18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களாக இருப்பவர்களுக்கும், புதுச்சேரிக்கு இடம்பெயர்ந்து திருத்தங்களுக்கு விண்ணப்பித்துள்ள ஏற்கெனவே உள்ள வாக்காளர்களுக்கும், அவர்களின் குடியிருப்பு முகவரிக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் அட்டை வழங்கப்படும்.
1.1.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்து சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், தொடர்ச்சியான புதுப்பிப்பின் போது ஆன்லைனில் (https://voters.eci.gov.in) அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து, தேவைப்பட்டால், சேர்க்கை (படிவம்-6), திருத்தம் (படிவம்-8) அல்லது நீக்கம் (படிவம்-7) ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் அல்லது ஆப்லைன் முறையில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்தல் தொடர்பான எந்தவொரு விளக்கத்திற்கும், பொதுமக்கள் 1950 என்ற பிரத்யேக கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
வரவிருக்கும் தேர்தலின் போது தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க, தேர்தல் துறை மெய்ப்பொருள் என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இது தேர்தல்கள் குறித்த எந்தவொரு தகவலையும் இடைநிறுத்த, சரிபார்க்க மற்றும் பகிர பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது தவறான தகவல் மற்றும் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வில்லியனூர் முதலிடம்: புதுச்சேயில் உள்ள 30 தொகுதிகளில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதியில் வில்லியனூர் முதலிடத்தை பிடித்துள்ளது. வில்லியனூர் தொகுதியில் அதிகபட்சமாக 42,679 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக உழவர்கரை தொகுதியில் 39,879 பேரும், ஏனாம் தொகுதியில் 37,664 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல், குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதிகளில் ராஜ்பவன் முதலிடத்தை பிடித்துள்ளது. 30 தொகுதிகளிலேயே குறைந்த பட்சமாக ராஜ்பவனில் 20,962 வாக்காளர் மட்டுமே உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக உருளையன்பேட்ைட தொகுதியில் 21,611 பேரும், உப்பளம் தொகுதியில் 25,290 பேரும் உள்ளனர்.