சேலம்:
சேலத்தில் நேற்று (பிப் 13) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உயிரிழந்த சுராஜின் குடும்பத்தினர், அவரின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் திரண்டுள்ளனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வட மாநில வெள்ளி தொழிலாளி சுராஜ் திடீரென மயக்கம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, பிரேத பரிசோதனை காலை 11.20 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் உடற்கூறாய்வு நடந்து முடிந்தது.
சேலம் அரசு மருத்துவ மனையில் திரண்டிருந்த அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் , தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இதுவரை யாரும் வந்து சுராஜின் குடும்பத்தை சந்திக்கவில்லை.
ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை . அவர்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்கு கட்சியின் சார்பில் உதவி செய்ய வேண்டும். அதுவரை உடலைப் பெற மாட்டோம், என தெரிவித்துள்ளனர்.
மேலும், சுராஜ் ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஆஞ்சியோ சிகிச்சை செய்ததாகவும், ஆனால், அவருடைய உடல் நன்றாகவே இருந்தது எனவும், அவரின் நண்பர்கள் தெரிவித்தனர்.