கோவை:
கோவை மாவட்ட எல்லையில் உள்ள வாளையாறு, மொடமாத்தி, சின்னாம்பதி உள்ளிட்ட வனப்பகுதிகளில் அதிக அளவிலான சிறுத்தைகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவுக்காக வனத்தை விட்டு வெளியேறும்.

மேலும், வன எல்லை கிராமங்களில் வீடுகளில் மக்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை அவ்வப்போது வேட்டையாடுவது வழக்கம்.
இந்நிலையில், மதுக்கரை வனச்சரகம் மொடமாத்தி அருகே ஐயன்பாதி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் நேற்று சிறுத்தை ஒன்று வந்துள்ளது. அப்போது, அங்கிருந்த முள்கம்பி வேலியில் சிறுத்தை சிக்கி உயிரிழந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில், கம்பிவேலியில் சிக்கி இறந்து கிடத்தது 2 வயதுடைய பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “வனத்தை விட்டு வெளியே வந்த சிறுத்தை, கம்பிவேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.
அதே இடத்தில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. வன கால்நடை மருத்துவர்களின் அறிக்கையின் முடிவில் தான் சிறுத்தை உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்” என்றனர்.