டெல்லிக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் போர்தான் வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – தவெக மீது உதயநிதி தாக்கு!!

தஞ்சாவூர்:
டெல்லிக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் போர்தான் வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் என திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நேற்று நடைபெற்ற இளைஞரணி கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: தமிழகத்தில் திமுக இளைஞரணியில் 5 லட்சம் பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் எந்த அரசியல் கட்சி சார்பு அணிக்கும் இப்படி வலிமையான கட்டமைப்பு கிடையாது.

இன்று பல கட்சிகள் பூத் கமிட்டி அமைக்க ஆள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. தமிழக அரசின் திட்டங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்த்து பாராட்டி வருகிறது.

மீண்டும் தமிழகத்தில் அமையப்போவது திமுகவின் 2.0 அரசுதான். அப்போது மகளிருக்கான உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவேன் என முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி அளித்துள்ளார். இதனால், ஒட்டுமொத்த எதிர்க்கட்சி கூட்டமும் கதறிக் கொண்டிருக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ளதால் அடிக்கடி மோடி, அமித் ஷா தமிழகத்துக்கு வருவார்கள், ஆனால், தமிழகத்துக்கு தேவையான நிதி மட்டும் வராது. உத்தரபிரதேசம், பிஹார் போன்ற வட மாநிலங்களில் மோடி, அமித்ஷாவின் வியூகங்கள் எடுபடலாம், ஆனால், தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது.

தமிழகத்துக்கு, டபுள் இன்ஜின் சர்க்கார் வேண்டும் என பிரதமர் மோடி கூறுகிறார். உங்களின் கூட்டணி வண்டியை பாருங்கள், கூட்டணியில் உள்ள அனைவரும் பஞ்சரான டயர்கள். உங்களுடைய பஞ்சரான டயர்களும், செயல்படாத டப்பா இன்ஜினும் தமிழ்நாட்டில் என்றைக்கும் ஓடாது.

இன்னொரு பக்கம் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டி சுற்றிக்கொண்டிருக்கிறது.

கொள்கை, லட்சியம், கோட்பாடு எதுவும் இல்லாமலும் தெரியாமலும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் ஒரு பொழுதுபோக்கு என்று நினைத்துக்கொண்டுள்ளனர்.

அரசியல் என்பது மக்கள் பணி, அது ஒரு கமிட்மெண்ட், டெடிகேஷன் என்பதை திமுகவினர் காட்ட வேண்டும்.

பாசிசத்தையும் அடிமைத்தனத்தையும் விரட்ட வேண்டும். டெல்லிக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் போர்தான் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்.

இந்த போரில் முன்கள பணியாளர்கள் இளைஞரணிதான். தமிழகம் என்றும் டெல்லிக்கு தலைகுனியாது என்பதை நிரூபிக்க வேண்டும்.

நம்மிடம் சாதனையும் வரலாறும் உள்ளன. உதயசூரியன் சின்னம் 200 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, எம்.பி. ச.முரசொலி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், சாக்கோட்டை க.அன்பழகன், நா.அசோக்குமார், கா.அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி.செழியன், எம்.பி.க்கள் ச.முரசொலி, சு.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில், துணை முதல்வர் பேசும்போது, “மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு சிலர் முட்டுக்கட்டை போட நினைத்ததை தமிழக முதல்வர் தகர்த்தெறிந்து, மகளிருக்கு ரூ.5,000 கொடுத்துள்ளார்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *