உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது உங்கள் கையில்தான் உள்ளது; உங்களை எப்படிச் செதுக்கிக் கொள்கிறீர்கள் என்பதே உங்கள் வெற்றி!! மகா சிவராத்திரி விழாவில் சத்குரு பேச்சு….

கோவை:
ஆதியோகி வழங்கியது மனித நல்வாழ்விற்கான தொழில்நுட்பங்கள் என, மகா சிவராத்திரி விழாவில் ஈஷா நிறுவனர் சத்குரு பேசினார். கோவை ஈஷா வளாகத்தில் நேற்று நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவுக்கு தலைமை வகித்து, சத்குரு பேசியதாவது:

யோகாவின் முழு முயற்சியும், எனது முயற்சியும், ஆதியோகியின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால முயற்சியும், மக்கள் யாரும் தங்களுக்குத் தாங்களே ஒரு தடையாக இருக்க கூடிய ஒரு பேரழிவாக மாறிவிடக்கூடாது என்பதே.

இந்த உலகில் நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு தடைகளை சந்திப்பீர்கள். ஆனால் மிக முக்கியமான விஷயம், உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் ஒரு தடையாக இருக்கக்கூடாது.

உங்கள் சொந்த மனம், எண்ணம், உணர்ச்சி மற்றும் ஆற்றல்கள் உங்களுக்கே ஒரு தடையாக மாறாமல் இருப்பதை ஒவ்வொரு வரும் உறுதி செய்ய வேண்டும். இதை எளிதாக்குவதுதான் யோகக் கலை.

மனித உடலே ஒரு அதிநவீன வேதியியல் தொழிற்சாலை போன்றது. உங்கள் உடலை நிர்வாகம் செய்யும் ஒரு சிறந்த சி.இ.ஓ-வாக நீங்கள் இருந்தால், பேரின்பத்தின் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வீர்கள்.

நீங்கள் ஒரு மோசமான நிர்வாகியாக இருந்தால், கவலை, மன அழுத்தம், முட்டாள்தனம் ஆகிய தேவையில்லாத விஷயங்களை உற்பத்தி செய்வீர்கள். ஆதியோகி வழங்கியது வெறும் நம்பிக்கைகளோ, தத்துவங்களோ, கோட்பாடுகளோ அல்லது போதனைகளோ அல்ல. அவை மனித நல்வாழ்விற்கான தொழில்நுட்பங்கள்.

வரலாற்றில் முதல் முறையாக, சொர்க்கத்தின் மீதான நம்பிக்கையை விட தொழில்நுட்பத்தின் மீதான நமது நம்பிக்கை அதிகரித்துள்ளது. எனவே, ஆதியோகி வருங்கால தலைமுறைக்கு உரியவர்.

மேல்நோக்கிப் பார்க்காமல், உள்நோக்கிப் பார்ப்பதுதான் ஒரே வழி. இது மதத்திலிருந்து பொறுப்புணர்வை நோக்கிய ஒரு பயணம். மதம் என்பது துரதிர்ஷ்டவசமாக பொறுப்புகள் எங்கோ மேலே இருப்பதாக மக்களை நம்ப வைக்கிறது. ஆனால், நமது கலாச்சாரம் எப்போதும் ‘கர்மா’ பற்றியே பேசுகிறது.

கர்மா என்றால் ‘நமது செயல்’ அல்லது ‘நமது உருவாக்கம்’ என்று பொருள். உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது உங்கள் கையில்தான் உள்ளது. உங்களை எப்படிச் செதுக்கிக் கொள்கிறீர்கள் என்பதே உங்கள் வெற்றி. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தியவர் ஆதியோகி. இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *