சென்னை:
“தற்போது நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சம், நிர்வாகத்தை சரியாக செய்யாத உங்கள் ஆட்சிக்கும் இடையே நடக்கும் போர். அதாவது, விஜய்க்கும் – ஸ்டாலின் சாருக்கும் இடையே நடைபெறும் போர்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்த சந்திப்புக்குப் பின்னர் தவெக நிர்வாகிகளை உறுதிமொழி ஏற்க வைத்தார் விஜய். அதில், “எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. யாரை நம்பியும் ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம்” என தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், “மக்களை நேசிக்கிற ஒரு சரியான தலைமை இல்லாததால், முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்தனர். இன்று மக்களை நேசிக்கும் இயக்கமாக தவெக வந்துள்ளது.
மக்களை உங்கள் ஊரில் வந்து பார்க்கவே விருப்பம். ஆனால் நம்மை சுற்றி நடக்கும் பல்வேறு சூழ்ச்சிகளால் மக்களை சந்திக்க முடியவில்லை. நமது ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து உங்களை சந்திக்கிறேன்.
தற்போது நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சம், நிர்வாகத்தை சரியாக செய்யாத உங்கள் ஆட்சிக்கும் நடக்கும் போர். விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடைபெறும் போர்தான் இந்த தேர்தல். தீய சக்தி திமுக, தூய சக்தி தவெகவுக்கு இடையேயான போர்.
தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏ.க்குவுமான தேர்தல் என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
இப்போது நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தலா, பிரதமர் பதவிக்கான தேர்தலா, முதல்வர் சார்?. எந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என நம் மக்களுக்கு தெளிவாகத் தெரியும். தவெகவுக்கு எதிரி திமுக தான்.
தமிழ்நாடுதான் விஜய்; விஜய் தான் தமிழ்நாடு. விஜய்யும் மக்களும் வேறு வேறு இல்லை, விஜய்யும் மக்களும் உடலும் உயிரும் போல. மக்களை நேசிக்கிற விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி செய்கிற ஸ்டாலின் சார் வேண்டுமா?
எனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார். அது முதல்வர் ஸ்டாலின் தான். ஒரு செய்தியாளர் சந்திப்பில், ‘எனக்கு யாரும் எதிரி கிடையாது’ என முதல்வர் கூறியிருந்தார். அப்படியென்றால், கரூர் விஷயத்தில் என் மேல் ஏன் பழி சுமத்தினீர்கள்.
உங்கள் உண்மையான நண்பர் லஞ்சம் , ஊழல் தான். அரசியலுக்கு வருவதற்கு முன்பு உங்கள் சொத்து மதிப்பு என்ன? அரசியலுக்கு வந்த பிறகு உங்கள் சொத்து மதிப்பு என்ன? தமிழகத்துக்கு தேவையில்லாத ஆட்சி திமுக. அறிவாலயம் பக்கம் யாரவது நடந்து போனால் கூட, ஏன் நிழலுக்கு ஒதுங்கினால் கூட கூட்டணிக்கு சேர்த்துக் கொள்கிறார்கள். திமுக கூட்டணிக்கு நான் ‘கல்லாப்பெட்டி கூட்டணி’ என பெயர் வைத்துள்ளேன்.
தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலம்தான், அது காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் காலத்தில் தான். இன்றைக்கு சூப்பர் ஸ்டாண்ட் – அப் காமெடிக்காரர் நடத்தும் மாநிலமாக மாறிவிட்டது.
தீய சக்திக்கு முடிவு கட்ட இந்தத் தேர்தலை பயன்படுத்துங்கள். விசிலுக்கு ஓட்டு போட்டு தீய சக்திக்கு முடிவு கட்டுங்கள். இது விசில் புரட்சி தேர்தல். இவ்வாறு விஜய் பேசினார்.