போடி:
“என்னை இந்த அளவுக்கு அரசியலில் தனிமைப்படுத்தும் வகையில், நான் என்ன தவறு செய்து விட்டேன்? அந்த உண்மையைச் சொல்லுங்கள்… நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு போடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஓபிஎஸ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
“ஜெயலலிதா இறந்த பிறகு எனக்கு முதல்வராவதில் விருப்பமில்லை. ஆனால், என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் ஆக்கினார்கள். அதன் பிறகு, என்னை பல்வேறு வகையிலும் அவமானப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து வெளியேற்றினார்கள்.
ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சியில் இருந்தாலும், ஆளுங்கட்சியிலும் இருந்தாலும் ஆட்சி முடிந்ததும் அனைவருக்கும் வாழ்த்து சொல்வது எனது மரபு.
அந்த அடிப்படையிலே திமுக ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் நான் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல கருத்து பரவிவிட்டது. டிடிவி தினகரன் என்னை பசுத் தோல் போர்த்தியப் புலி என்று கூறியுள்ளார்.
அரசியல் நாகரிகம், பண்பாடு கருதி நான் கடின வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை. நான் நினைத்தால் அவரை விட மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி கருத்து கூற முடியும். நான் இனி சங்கர மடத்துக்கா செல்ல முடியும்?
என்னை இந்த அளவுக்கு அரசியலில் தனிமைப்படுத்தும் வகையில், நான் என்ன தவறு செய்து விட்டேன்? அந்த உண்மையைச் சொல்லுங்கள்… நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.
திமுக பலமான கூட்டணியில் உள்ளது. ஆகவே, அவர்களை வெல்ல அதிமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
நான் போடி தொகுதியில் போட்டியிடுகிறேனா என்று ஆண்டவனுக்கு தான் தெரியும். தனிக்கட்சி தொடங்க மாட்டேன்.
எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் அதிமுக கட்சியில் வகித்த சட்ட விதிமுறைகளை மீண்டும் கொண்டு வரும் வரை அதிமுகவுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டே இருப்பேன்” என்றார் ஓபிஎஸ்.