புதுடெல்லி:
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தொழில் முதலீடுகளுக்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார்.
உ.பி.யில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி, ஜப்பான் நிறுவனங்கள் ரூ.11.000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஜப்பானுக்கு தொழில் முதலீடு பெற பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் முதல் நாளில் நேற்று அவர் டோக்கியோவுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு நெற்றியில் திலகம் இட்டு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
முதல் நாளில், உலகளாவிய வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனமான மிட்சுய் & கோ நிர்வாகத்தினரை முதல்வர் யோகி சந்தித்தார். இவர்களிடம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரிய சக்தி, உயிரி ஆற்றல், பசுமை ஹைட்ரஜன் மற்றும் எரிசக்தி சேமிப்பு திட்டங்கள் ஆகிய 4 முக்கிய துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை முதல்வர் யோகி எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: அடிமட்ட அளவில் இருந்து இந்தியா-ஜப்பான் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த உ.பி. அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக, உ.பி விளங்குகிறது. உ.பி.யில் சிறந்த இணைப்பு, பிரத்யேக சரக்கு வழித் தடங்கள், விரைவுச் சாலை வலையமைப்பு மற்றும் தொழில்துறை கிளஸ்டர்கள் என முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை அரசு வழங்குகிறது.
உ.பி.யில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யத் தேவையான அனைத்து வசதிகள், உதவிகளை வழங்க அரசு தயாராக உள்ளது. இவ்வாறு முதல்வர் யோகி உறுதியளித்தார். இதையடுத்து, முதல்வர் யோகியின் முதல்நாள் ஜப்பான் பயணத்தில் பல்வேறு ஜப்பானிய நிறுவனங்களுடன் சுமார் ரூ.11,000 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதில், குபோடா கார்ப்பரேஷன், மிண்டா கார்ப்பரேஷன், ஜப்பான் ஏவியேஷன் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரி, நாகசே & கோ. லிமிடெட் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
முன்னதாக முதல்வர் யோகியின் 2 நாள் சிங்கப்பூர் பயணமும் இருந்தது. இங்கு முதல்வர் யோகியின் கூட்டத்தில் சிங்கப்பூரின் உயரிய 100 நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், அந்நாட்டு நிறுவனங்கள் உ.பி.யில் முதலீடு செய்ய ரூ.1 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளன. இது போன்ற வெளிநாட்டு தொழில் முதலீடுகள் மூலம் உ.பி.யின் தொழில் பொருளாதாரம் வரும் 2029-30ம் ஆண்டுகளுக்குள் அதிக அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.