டெல் அவிவ்:
இந்திய பாரம்பரிய உடையணிந்து மோடியை வரவேற்று அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அதுபற்றிய நெதன்யாகுவின் இந்தி ட்வீட் கூடுதல் சிறப்பு.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேல் சென்றார். டெல் அவிவ் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றார்.
அங்கு இரு நாட்டு தேசிய கீதங்களையும் ராணுவ பேண்ட் குழுவினர் இசைத்தனர். பின்னர், நாடாளுமன்றத்துக்கு இருவரும் சென்றனர்.
இஸ்ரேல் நாடாளுமன்றம் ‘நெசட்டில்’ பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். அவர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நுழைந்த போது, ‘மோடி.. மோடி’ என இஸ்ரேல் எம்.பி.க்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
தொடர்ந்து நெதன்யாகு ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வந்தார். அப்போது அவரை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் இந்திய பாரம்பரிய உடையணிந்திருந்தார். இது மோடியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
நெதன்யாகுவின் இந்த செய்கையானது இந்தியா – இஸ்ரேல் இடையேயான வலுவான பங்களிப்பை உறுதிப்படுத்துவதோடு, இருநாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, ராஜாங்க உறவுகளைப் பிரதிபலிப்பதாகவும், மோடி – நெதன்யாகுவின் தனிப்பட்ட பிணைப்பை உறுதிப்படுத்துவதாகவும் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
முன்னதாக, இந்திய உடையணிந்தது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில், “எங்களது விருந்து நிகழ்ச்சிக்கு முன்னதாக நான் எனது நண்பர் பிரதமர் மோடியை இந்திய பாரம்பரிய உடையணிந்து ஆச்சர்யப்படுத்தினேன்,” என்று இந்தியில் ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “அருமை! இந்திய உடைகள் மீதான தங்களுடைய அன்பு, எங்களது நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் மரபுகள் மீதான தங்கள் மரியாதையை பிரதிபலிக்கிறது,” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.