நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! – ராமதாஸ்!!

சென்னை:
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வருவாய்த்துறையில் பணியாற்றுபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிப்பு என்பதை ரத்து செய்ய வேண்டும்.

காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் முதல், 3 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், நில அளவைத் துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் வருவாய்த் துறையில் தொகுதி-2 தேர்வு மூலம் தேர்வு பெற்று நேரடி நியமனம் செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு 12-வது ஊதியம் குழுவின் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

நேரடி நியமன அலுவலர்களுக்கும் துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பெற 4 ஆண்டுகள் பணி அனுபவம் என விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேரடி நியமன அலுவலர்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர்களும் 2 தினங்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வருவாய்த் துறையில் வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர்கள், கிராம உதவியாளர்கள் வரை பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நில அளவீடு செய்வது, பட்டா மாற்றம் செய்வது, இருப்பிடம் சாதி வருமானம் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்கள் பெறுவது போன்ற பொதுமக்களின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

வருவாய்த் துறை அலுவலர்கள், ஊழியர்கள் வழக்கமான அரசு பணிகளை மட்டும் அல்லாமல் அரசின் சிறப்பு திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவும் இரவு பகலாக பணியாற்றுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் அவரவர்களின் கோரிக்கைகளுக்காக திடீர் போராட்டங்கள் நடத்துகின்றபோதும், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் திருடுதல், கடத்துதல் போன்ற சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகள் போன்றவர்களை தடுப்பதற்காகவும் நேரம் காலம் பார்க்காமல் சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் சமரசம் செய்தும், அரசு சொத்துக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செல்லும் போது போராட்டக்காரர்களாலோ, கடத்தல்காரர்களாலோ, சமூக விரோதிகளாலோ அலுவலர்களுக்கு அச்சுறுத்தலும், உயிருக்கு பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது.

அதற்காக அவர்கள் சிறப்பு ஊதியம் கேட்பதும், பணி பாதுகாப்பு சட்டம் கேட்பதும் நியாயமானது. அரசுக்காகவும், மக்களுக்காகவும், பொது சொத்தை காப்பாற்றுவதற்காகவும் பாடுபடும் அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல், பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான வேலை என்பது 25 விழுக்காடாக இருந்ததை 5 விழுக்காடாக குறைத்திருப்பது முறையானது அல்ல.

மேலும் அரசின் நிர்வாகத் துறையில் 14,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ள நிலையில் பதிவு மூப்பு அடிப்படையிலோ அல்லது அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாகவோ நிரப்பாமல் காலியிடங்களாக வைத்துக் கொண்டிருப்பதும், மற்றொரு பக்கம் வெளி பணி ஆள் சேர்ப்பு மூலம் ஒவ்வொரு தாலுக்காவுக்கும் இரண்டு பணியாளர்கள் என நியமித்திருப்பதும் தவறான செயலாகும்.

எனவே நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *