முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்!!

சென்னை:
திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் ஐக்கியமானார்.

அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு இன்று (பிப்.27) திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக-வில் ஓபிஎஸ் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திமுக-வில் ஓபிஎஸ் இணைந்தபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

அணி மாறிய ஓபிஎஸ்: 75 வயதான ஓபிஎஸ் கடந்த 1973 முதல் அதிமுக-வில் இருந்தவர். அக்கட்சியின் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் துணை தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக-வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தொடர்ந்து மீண்டும் அக்கட்சியில் இணைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவர், அது பலன் அளிக்காத நிலையில் திமுக-வில் இணைந்துள்ளார்.

அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார்.

ஓபிஎஸ் கடந்து வந்த பாதை:

அதிமுகவில் வெடித்த ‘ஒற்றைத் தலைமை’ விவகாரத்தால் அந்தக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வைத் தொடங்கி தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்தார். தனிக் கட்சி தொடங்கினால், ‘அதிமுகவுக்கும் உனக்கும் இனி சம்பந்தமில்லை’ என்று சொல்லி ஒரேயடியாய் கதவை இழுத்து மூடிவிடுவார்கள் என்று நினைத்த ஓபிஎஸ், தனி அணியாகச் செயல்பட்டுக் கொண்டே அதிமுகவுக்குள் அடைக்கலமாக தூது அனுப்பிக் கொண்டே இருந்தார்.

ஆனால், “எந்த நிபந்தனையும் இன்றி கட்சியில் சேரத் தயாராய் இருக்கிறேன்” என்று அவர் சொன்ன பிறகும் கூட ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்க்க சம்மதிக்கவே இல்லை இபிஎஸ். இந்த விஷயத்தில் தனக்கு கைகொடுப்பார்கள் என ஓபிஎஸ் பெரிதும் நம்பிய பாஜக தலைவர்களும் அவரை கைவிட்டுவிட்டதால் என்டிஏ-வில் இருந்து வெளியேறினார்.

இதனிடையே, இனியும் இவரை நம்பிக் கொண்டிருப்பது நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்த அவரது விசுவாசிகளில் சிலர் திமுக பக்கம் சத்தமில்லாமல் செட்டிலானார்கள்.

இன்னும் சிலர் தாய்க் கழகத்திலும் தவெக-விலும் தஞ்சமடைந்தார்கள். இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளன்று, “இனி நான் என்ன சங்கர மடத்துக்கா போவேன்?” என்று போடியில் கூட்டம் கூட்டி விரக்தியுடன் விம்மினார் ஓபிஎஸ்.

இதற்கு நடுவே மகன் சகிதம் சென்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போதே சர்ச்சைகள் வெடித்ததால் சிறிது காலம் அமைதிகாத்தவர், அண்மையில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளில் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்ததுடன், “ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டது; மீண்டும் திமுக-வே ஆட்சிக்கு வரும்” எனப் பேட்டியும் கொடுத்தார் ஓபிஎஸ். அவரது ஆதரவு எம்எல்ஏ-வான உசிலம்பட்டி ஐயப்பனும், “ஸ்டாலினே மீண்டும் முதல்வராக வேண்டும்” எனச் சட்டமன்றத்தில் வாழ்த்தி முழங்கினார்.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, “ஓபிஎஸ்ஸை சேர்க்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தால் இபிஎஸ் கூட்டணியை விட்டுப் போய்விடுவார் என பயந்தே அவரை பாஜக கண்டுகொள்ளவில்லை.

‘மூன்று முறை முதல்வராக இருந்த நான், இப்போது ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்குச் செல்வது சரியாக இருக்காது’ என்று சொல்லி விஜய் பக்கம் போகவும் ஓபிஎஸ் மறுத்துவிட்டார். அதன்பிறகே திமுக தரப்புடன் பேச்சுவார்த்தை தீவிரமானது.

கட்சியில் இணைந்தால் உரிய மரியாதை அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்த திமுக தலைமை, ஓபிஎஸ் ஆதரவாளர்களில் சிலருக்கும் வாய்ப்பளிக்கலாம் எனச் சொன்னது. அதனால்தான் முதலில் தனது விசுவாசிகளை அனுப்பிவிட்டு இப்போது அவரும் இணைந்துள்ளார்” என்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *