அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!!

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார்.

அப்போது, பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்புள்ள 56 தொகுதிகளின் பட்டியலை பழனிசாமியிடம் அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதிமுக – பாஜக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது. பாமக-வுக்கு 18 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக பழனிசாமி உறுதியளித்ததாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கடந்த 8-ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, பாஜக-வுக்கு 56 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்.

ஆட்சியில் பங்கு வேண்டும். இந்த கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் இடம்பெற வேண்டும் என்று அமித் ஷா, பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரன் பழனிசாமியை, நேற்று நேரில் சந்தித்தார். அப்போது, பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்புள்ள 56 தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், ராமதாஸ் திமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்புள்ளது குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும், கூட்டணி இறுதியானதும், யாருக்கு எந்தனை தொகுதிகள் எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என பழனிசாமி கூறியதாகத் தெரிகிறது.

தொடர்ந்து, வரும் ஜன.23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக மகளிர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

அதில் பங்கேற்க வருமாறு பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த நயினார் நாகேந்திரன், அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார்.

இந்த மாநாட்டுக்கு முன்பாக கூட்டணியில் இதர கட்சிகளையும் சேர்த்து, ஜன.20-ம் தேதி தமிழகம் வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும்.

பிரதமர் பங்கேற்கும் மாநாட்டில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் மேடையேற வேண்டும் என்று பழனிசாமியிடம் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக இல்லாத தமிழகம்: நயினார் கனவு இதனிடையே நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற பெயரில் தமிழகத்தில் புதிய திட்டம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார்.

நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மெல்ல தூக்கத்திலிருந்து விழித்திருக்கும் முதல்வருக்குத் தமிழக மக்களின் கனவுப் பட்டியலை நாங்கள் சொல்கிறோம்.

சீரான சட்டம் – ஒழுங்கு, கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம், திமுக-வின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம், அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத தமிழகம், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்மானத்துடன் வாழும் தமிழகம், தூய்மைப் பணியாளர்கள், விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கண்ணீர் சிந்தாமல் வாழும் தமிழகம், அரசின் அநீதிகளை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிசம் இல்லாத தமிழகம் அமைய வேண்டும்.

மேலும், விசாரணைக் கைதிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப்படாத தமிழகம், கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம், அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம், காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத, இந்துமத வெறுப்பில்லாத, மொத்தத்தில், திமுக இல்லாத தமிழகம் வேண்டும். அதுவே, தமிழக மக்களின் கனவு. இது வெகு விரைவில் நிறைவேறும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *