துரோகத்தின் முழு உருவமும் தானே என்பதை, மீண்டும் மீண்டும் தனது செயல்களால் உணர்த்திக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் -கவுதமி…..

சென்னை:
‘ஓபிஎஸ் இன்று எழுதியிருக்கும் துரோக வரலாற்றை தமிழ்நாட்டு மக்களும் வரலாறும் ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை’ என அதிமுக நிர்வாகியும், நடிகையுமான கவுதமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஓபிஎஸ்சின் கோழைத்தனமான பிழைப்புவாதத்தின் உச்சகட்டம் இது. இது ஏமாற்றத்தின் உச்சகட்டமும் கூட. துரோகம் என்றால் அது ஓபிஎஸ். ஓபிஎஸ் என்றால் துரோகம்

துரோகத்தின் முழு உருவமும் தானே என்பதை, மீண்டும் மீண்டும் தனது செயல்களால் உணர்த்திக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். ஜெயலலிதாவை போற்றி, அவரால் அடையாளம் காணப்பட்டதை நேற்றுவரை பெருமையாகக் கூறிக் கொண்டிருந்த ஓபிஎஸ், இன்று ஜெயலலிதாவை புண்படுத்திய, துன்புறுத்திய, அவமதித்த திமுகவில் பணத்திற்காகவும் பதவிக்காகவும் மண்டியிட்டு கிடக்கிறார்.

எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் நல்லாட்சி கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில், ஜெயலலிதாவால் இருமுறை தமிழ்நாட்டின் முதல்வராக நியமிக்கப்பட்டவர் ஓபிஎஸ். ஆனால், அரசியல் என்பதே மக்களுக்கு செய்யும் சேவை என்பதையும், தான் மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் என்பதையும் அடியோடு மறந்து, எதிர்க்கட்சியான திமுகவில் இணைகிறார் என்றால், தன்னுடைய பேராசைக்காக எந்த எல்லைக்கும் செல்வார், எத்தகைய துரோகத்தையும் செய்வார் இந்த ஓபிஎஸ் என்பதை அம்மாவின் தொண்டர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

தன்னை அடையாளம் காட்டிய ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைக்கும் வகையில், அரசியலில் சாமர்த்தியமான முடிவை எடுப்பதாக நினைத்துக்கொண்டு, தனது சுயமரியாதையை விற்றுவிட்டார் ஓபிஎஸ்.

நேற்று வரை திமுகவை “அரசியல் ஆபத்து”, “மக்கள் விரோத சக்தி” என்றெல்லாம் கூறி வந்தவர், இன்று தனது சுயலாபத்திற்காக மக்கள் விரோதிகளுக்கு அடிமையாகிவிட்டார்.

ஓபிஎஸ் இன்று எழுதியிருக்கும் துரோக வரலாற்றை தமிழ்நாட்டு மக்களும் வரலாறும் ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை’ எனத் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *