சுயநலத்தின் மொத்த உருவமாக உள்ள ஓபிஎஸ், திமுகவில் இணைந்தது வெட்ககேடானது – கே.பி.முனுசாமி காட்டம்!!

கிருஷ்ணகிரி:
சுயநலத்தின் மொத்த உருவமாக உள்ள ஓபிஎஸ், திமுகவில் இணைந்தது வெட்ககேடானது என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலிலதா பிறந்தநாளையொட்டி, கிருஷ்ணகிரி அரசு மருத்துமவனையில் கடந்த 24-ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் பங்கேற்ற அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுக ஆட்சியில் 3 முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அந்த இயக்கத்தில் இருந்து தனக்கென அடையாளத்தை காட்டியவர்.

ஆனால், இன்றோ அதிமுக எதனால் உருவானதோ, இந்த இயக்கத்தின் தலைவர் எம்ஜிஆர் யாரை தீயசக்தி என கூறினாரோ, அவர்களிடம் ஓபிஎஸ் சேர்ந்துள்ளார். இது ஒரு வெட்ககேடான விஷயம்.

அவரை மனிதராக பார்ப்பதற்ககே வெட்கமாக உள்ளது. ஓபிஎஸ் 3 முறை முதல்வராக இருந்தது கசப்பான நினைவா? சுயநலத்தின் மொத்த உருவம் அவர்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்து தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என கேட்க வேண்டும். அதுதான் அதிமுகவின் நடைமுறை.

கட்சியை களங்கப்படுத்த நினைக்கும் ஓபிஎஸ்ஸை வெளியேற்ற வேண்டும் என தொண்டர்கள் தீர்மானம் நிறைவேற்றி அதன் மூலம் வெளியேற்றப்பட்டவர்.

இணைப்பு என கூறிக் கொண்டு கட்சி தொண்டர்கள், மக்களை மட்டுமல்ல, தன்னையும் அவர் ஏமாற்றிக் கொண்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், சசிகலா ஏன் ராஜினாமா கடிதத்தை வாங்கினார்? ஜெயலலிதா போல் தன்னை உருவகப்படுத்திக் கொண்டு அவரது காரில் பவனி வந்து தன்னை முதல்வராகிக்கொள்ள எல்லா பணிகளையும் செய்தார்.

ஆனால், தர்மம் அதை விடுமா? சசிகலாவை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார்.

ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருக்கிறது. அதற்கு நீதி விசாரணை வேண்டும் என மேடைகளில் பேசினார். ஆனால், திடீரென சசிகலாவை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.

யாரை இந்த இயக்கத்தில் இணைக்கக் கூடாது என கூறினோமோ, அவர்களையே இந்த இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என முயற்சி செய்பவர்களை எப்படி கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியும்?

பழனிசாமி ஒரு தீர்க்கதரிசி. இவர்கள் எல்லாம் மிகப் பெரிய சந்தர்ப்பவாதி என அவர் மனதில் பட்டுள்ளது.

அதனால் எத்தனையோ வழக்குகள் போட்டாலும், அதனை எதிர்கொண்டார். எந்தச் சூழ்நிலையிலும், அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்கிற சிந்தனை ஒருமுறை கூட அவருக்கு வரவில்லை.

அதிமுக பிளவுபட்டதாக மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்கள் பின் யாரும் செல்லவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *