ஹோபர்ட்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்யணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஹோபர்ட் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 70 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் பிரதிகா ராவல் 81 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் சேர்த்தனர். ஸ்மிருதி மந்தனா 31, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11, தீப்தி சர்மா 1, அமன்ஜோத் கவுர் 13, ரிச்சா கோஷ் 22, கஷ்வி கவுதம் 25, கிரந்தி கவுடு 19 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சுதர்லேண்ட், அலானா கிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
252 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 36.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜார்ஜியா வால் 82 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 101 ரன்களும், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 62 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் விளாசினர்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது.
முதல் போட்டியில் அந்த அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்தியாவுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்வது இது 12-வது முறையாகும். அந்த அணி ஒருமுறை கூட இந்தியாவிடம் தொடரை இழக்கவில்லை.