விடிய விடிய பெய்த கனமழையால் புதுச்சேரியில் 11.84 செமீ மழை அளவு பதிவானது!!

புதுச்சேரி:
விடிய விடிய பெய்த கனமழையால் புதுச்சேரியில் 11.84 செமீ மழை அளவு பதிவானது. மழை நின்றும் நகரின் முக்கியமான இந்திராகாந்தி சதுக்கத்தில் வடியாத வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்தனர்.

புதுவையில் கடந்த 16-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்தது. பகல் பொழுதில் மட்டும் 2.86 செமீ மழை பதிவானது.

மதியத்துக்கு பின் மழை பெய்யவில்லை. ஆனால் இரவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டது.

இரவு 7 மணிக்கு மேல் சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரெங்கும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல நின்றது.

புதுச்சேரி நகரச் சாலைகள் வெள்ளக்காடானது. அதேபோல் கடலுார் மற்றும் விழுப்புரம் சாலைகளும் வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தந்த பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் வாரி இரைத்து வெளியேற்றினர். தொடர்ந்து இரவு முழுவதும் அவ்வப்போது மழை கொட்டியது. இரவில் மட்டும் 11 செமீ மழை பதிவானது.

ஒட்டுமொத்தமாக 24 மணி நேரத்தில் புதுவையில் 14.7 செமீ மழை பதிவாகியது. மழை பாதிப்புகளை அறிந்த முதல்வர் ரங்கசாமி, நகரின் பல்வேறு இடங்களுக்கு காரில் சென்று மழை பாதிப்புகளை பார்வையிட்டார்.

மழைநீர் வெளியேற்றவும், பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இன்று அதிகாலை முதல் மழை இல்லை. இதனால் பெரும்பாலான சாலைகள், தாழ்வான பகுதிகளில் இருந்து மழை நீர் வெளியேறியது. வானம் வெறிச்சோடி காணப்பட்டு வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் சாலைகள் காய தொடங்கியது.

மழை நின்றும் இந்திராகாந்தி சதுக்கத்தில் வடியாத வெள்ளம்: நகரின் முக்கியப் பகுதியான இந்திராகாந்தி சதுக்கத்தில் கனமழை பெய்யும்போது முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும். இதை தடுப்பதற்காக அண்ணாநகரில் வாய்க்காலை அகலப்படுத்தி பெரியவாய்க்காலுடன் இணைந்தனர்.

இதனால் மழைநீர் தேங்காது என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு விடிய, விடிய தொடர் கனமழை பெய்தது. இதில் நகரப் பகுதி முழுவதும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் காலையில் மழை நின்றதும் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்தது. தாழ்வான பகுதிகளிலும் தேங்கிய மழைநீர் வெளியேறியது.

அதேநேரத்தில் இந்திராகாந்தி சதுக்கத்தில் நான்கு புறமும் தேங்கிய மழை வெள்ளம் வடியவில்லை. இதனால் அப்பகுதி வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திராகாந்தி சதுக்கம் அருகே உள்ள பஸ்நிறுத்தத்தில் மழைநீர் தேங்கி நின்றது.

அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அப்பகுதியிலிருந்த வணிக நிறுவனங்களின் பார்க்கிங் பகுதியிலும் தண்ணீர் புகுந்திருந்தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *